என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்திருக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 564 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் 2 லட்சத்து 64 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீதமும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் கல்லூரியாக இருந்தால் அரசு ஒதுக்கீட்டுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் தலா 50 சதவீதம் இடங்கள் ஆகும். இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்து இருந்தார். அதேபோல், என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி, கடந்த மே மாதம் 3ம் தேதி ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தொடங்கினர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் கடந்த மாதம் 30ம் தேதி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதால், அந்த பகுதியில் இருந்து என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிப்பவர்களுக்காக காலஅவகாசத்தை நீட்டியது.
அந்தவகையில், நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 31ம் தேதி வரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்திருந்தன. கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இரவு 12 மணி வரை நேரம் இருப்பதால், ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பார்த்தால், இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
விண்ணப்பிப்பதற்கான பணிகள் முடிந்துள்ள நிலையில், விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி வருகிற 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஜூலை முதல் வாரம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி, விரும்பிய பாடங்களை தேர்வு செய்து சமர்ப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வு பதிவு எண்களை மாணவர்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்துவிட்டால் அதை வைத்து மதிப்பெண்கள் பெற்று சரிபார்க்கப்படும். மாணவர்கள் தாங்கள் பதிவு செய்த விண்ணப்ப படிவத்தை நகல் எடுத்து வைத்துக் கொண்டு சான்று சரிபார்ப்பின் போது எடுத்து வர வேண்டும்.