Advertisment

எண்ணூர் அமோனியா கேஸ் கசிவு: உர நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு

சுற்றுச்சூழல் இழப்பீடாக நிறுவனத்திடம் இருந்து ரூ.5.92 கோடியை பெற வேண்டும் என்றும் டி.என்.பி.சி.பிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Ennore gas.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எண்ணூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பான விவகாரத்தில் தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் என்ற உர நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

சென்னை, எண்ணூர் பகுதியில் கடந்த டிச.26 நள்ளிரவு தனியார் தொழிற்சாலையின் குழாய்களில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவினால் அருகில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. அமோனியா வாயு கசிவுக்கான காரணத்தை கண்டறிய தமிழ்நாடு அரசு 7 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவை அமைத்தது. 

இந்நிலையில் அக்குழு வாயுக் கசிவு மற்றும் பரிந்துரைகளை வழங்கி உள்ளது. அது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொழில்நுட்பக் குழு தனது விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு எண்ணூர் கடற்கரைக்கு அருகில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் உரத்தொழிற்சாலையின் கடலுக்கு அடியில் அமோனியா கொண்டு செல்லும் குழாயில் இருந்து அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது என்று முடிவு செய்துள்ளது. 

மிக்சாம் புயல் காரணமாக குழாயைச் சுற்றியுள்ள கனமான கிரானைட் பாறைகள் இடமாற்றம் கொண்டதால் குழாயில் சேதம் ஏற்பட்டு அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று குழுவால் கணிக்கப்பட்டுள்ளது.

குழுவின் பரிந்துரைகள்: தொழிற்சாலையில், கடலுக்கு அடியில் தற்போதுள்ள அமோனியா கொண்டு செல்லும் குழாய்களுக்கு பதில் புதிய குழாய்கள் அதிநவீன கண்காணிப்பு, தானியங்கி கட்டுப்பாடு மற்றும் விபத்து தடுப்பு சாதனங்களுடன் அமைக்கப்பட வேண்டும்.

கடலில் இருந்து சாலை வழியாக தொழிற்சாலைக்கு அமோனியா வாயு கொண்டு செல்லும் இடத்தில் குழாய் சரியாக பாதுகாக்கப்படவில்லை. இக்குழாயானது பொது மக்கள் யாரும் அணுகா வண்ணம் உரிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இருப்பதை தொழிற்சாலை உறுதி செய்ய வேண்டும்.

முன்குளிரூட்டுதல் (Pre Cooling) மற்றும் அமோனியா வாயுவினை திரவ நிலையில் கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு கொண்டு வருவதற்கு, குழாயின் உறுதித்தன்மையை உறுதி செய்வதற்காக நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி அழுத்த சோதனையை இந்நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்.

குழாய் அமைப்பின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பினை தொழிற்சாலை உறுதி செய்த பின்னரே, அமோனியா அக்குழாயின் வழியே செலுத்தப்பட வேண்டும்.

அமோனியா கசிவு ஏற்பட்டால் ஆலையை சுற்றியுள்ள கிராம பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் வகையில் தொழிற்சாலையின் அனைத்து திசைகளிலும் மற்றும் கடற்கரையிலிருந்து சாலை வழியாக ஆலைக்கு செல்லும் குழாய்க்கு அருகிலும் அம்மோனியா சென்சார்கள் அமைக்கப்பட வேண்டும். 

தொழிற்சாலை உள்ளேயும் வெளியேயும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த அவசர தயார்நிலை அறிக்கையை (Emergency Preparedness Plan) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழிற்சாலை தயாரிக்க வேண்டும்.

அமோனியா வாயு காற்றில் நேரடியாக வெளியேற்றப்படுவதை தவிர்த்து எரிக்கப்படுவது (flare) உறுதி செய்யப்பட வேண்டும்.

அமோனியா வாயுக் கசிவின் தாக்கத்தை குறைக்க, அம்மோனியா செல்லும் குழாய்களில் தானியங்கி நீர் தெளிப்பான்கள் (Automated Water Curtain) அமைக்கப்பட வேண்டும்.

அமோனியா வாயு குழாயில் கசிவு ஏற்படும்போது உடனடியாக அதன் செயல்பாட்டினை நிறுத்துவதற்கான தானியங்கி கருவிகள் (Automated Tripping System) நிறுவப்பட வேண்டும்.

விபத்துகள் மற்றும் ஆலையில் ஏற்படும் அசாதாரண நிகழ்வுகளின் போது அருகிலுள்ள கிராமங்களில் மக்களை எச்சரிக்க அதிக ஒலி ஏற்படுத்தும் ஒலி எழுப்பான்கள் தொழிற்சாலைகளால் அமைக்கப்படவேண்டும்.

அவசரநிலை காலங்களில் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள கிராமங்களில் பொது மக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் (Do’s & Don’ts) பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தொழிற்சாலையை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் அம்மோனியா வாயு வாசனையை உணர்ந்தால் அவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய மாதிரி பயிற்சிகளை (Mock Drill) மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் மூலம் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும்

தொழிற்சாலை மற்றும் அமோனியா எடுத்துச் செல்லும் குழாய் உட்பட அனைத்து இடங்களிலும் முழு தானியங்கி (inter locking system) கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

அமோனியம் பாஸ்பேட் பொட்டாஷ் சல்பேட் (APPS) ஆலையை மறுதொடக்கம் செய்வதற்கு முன், அமோனியா சேமிப்பு கிடங்கு, அனைத்து அபாயகரமான இரசாயன சேமிப்பு தொட்டிகள் மற்றும் குழாய்களுக்கு பாதுகாப்பு தணிக்கை, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் தொழிற்சாலை மேற்கொள்ள வேண்டும்.

முகக்கவசம், தலைக்கவசம், பாதுகாப்புக் காலணிகள், பாதுகாப்புக் கண்ணாடிகள், இரசாயனச் பாதுகாப்பு கையுறைகள் மற்றும் உடைகள், சுவாசக் கருவிகள் போன்ற அத்தியாவசியமான பாதுகாப்பு உபகரணங்களை (PPE) தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூபாய்.5.92 கோடி சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உடனடியாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Ennore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment