Actress Vijayashanti Tamil News: அரியலூரைச் சேர்ந்த மாணவி, தஞ்சாவூர் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். அந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், பள்ளி நிர்வாகம் மீது மதமாற்ற புகார் சுமத்தப்பட்டது. இதை பாஜக கையில் எடுத்த பிறகு பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, விசாரணைக்குழு ஒன்றை அறிவித்தார். அதன்படி விஜயசாந்தி தலைமையிலான குழு நேற்று அரியலூர் வடுகபாளையத்தில் உள்ள மாணவியின் இல்லத்துக்கு சென்று விசாரணை நடத்தியது. தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து, இந்த விவகாரம் தொடர்பாக கேட்டறிந்தது.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய குழுவின் தலைவர் விஜயசாந்தி, "தஞ்சை பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யவில்லை. ஒரு பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தான் போராடுகிறோம். திமுக அரசு ஏன் இந்த விவகாரத்தில் மெளனமாக உள்ளது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், தமிழக முதல்வர் தனது மனநிலையை மாற்றிக்கொண்டு, மாணவிக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
"மாணவியின் மரணம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் தொடர்ச்சியான சித்திரவதைகளை அனுபவித்துள்ளார். இவரின் மரணம் குறித்து மாநில அரசு வழக்கத்திற்கு மாறான மௌனம் கடைப்பிடித்து வருகிறது. யாரும் சிறுமியின் குடும்பத்தை ஆதரிக்கவில்லை. பாஜக மட்டும் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளது. ஆனால் அது போதுமானதாக இல்லை. அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இறந்த மாணவியின் தந்தை 25 ஆண்டுகளாக திமுகவில் இருக்கிறார். மாணவியின் இழப்புக்கு குடும்பத்தினருக்கு ஆதரவாக எந்த ஒரு வார்த்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசவில்லை. அவர் தனது மனநிலையை மாற்றிக்கொண்டு, மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.