/indian-express-tamil/media/media_files/2025/08/23/trichy-eps-2025-08-23-20-47-50.jpg)
தி.மு.க பதவிக்கு வர எது வேண்டுமானாலும் பேசும்; வந்த பிறகு எதுவும் செய்யாது: திருவெறும்பூரில் இ.பி.எஸ் பேச்சு
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், 110-வது தொகுதியாக இன்று திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
தி.மு.க. ஆட்சியில் விலையேற்றம்
தி.மு.க.வின் 57 மாத கால ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுவிட்டதாக பொய் கூறி வருவதாகத் தெரிவித்தார். அ.தி.மு.க. ஆட்சியில் கட்டுக்குள் இருந்த அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை, தி.மு.க. ஆட்சியில் கடுமையாக உயர்ந்துள்ளதாகக் கூறினார். விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த அழுத்தத்தால்தான் தி.மு.க. அரசு வேறு வழியின்றி அதை வழங்கியதாகவும், இது அ.தி.மு.க.வுக்குக் கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 2 மாதங்களிலேயே வாக்குறுதியை நிறைவேற்றியது போல, தி.மு.க. செயல்படவில்லை என்றும், தேர்தலைக் கருத்தில்கொண்டு தற்போது மேலும் 30 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளனர் என்றும் கூறினார்.
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என விமர்சித்த எடப்பாடி, காவல்துறை தலைமை இயக்குநரை (டி.ஜி.பி.) நியமிப்பதில் கூட வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம்சாட்டினார். போதைப்பொருள் விற்பனை மாநிலம் முழுவதும் அமோகமாக நடைபெறுகிறது என்றும், காவல்துறை அதிகாரிகள், முதியோர், பெண்கள், மாணவர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லை என்றும் தெரிவித்தார். "6 மாதங்களில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அண்ணன் - தம்பி இடப் பிரச்னையை விசாரிக்க சென்ற எஸ்.ஐ.யும் வெட்டிக் கொல்லப்பட்டு உள்ளார். நிலைமை இப்படியே போனால், தமிழகத்தைப் பாதுகாக்க ராணுவத்தைத்தான் கொண்டுவர வேண்டும்" என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.
தி.மு.க.வில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அனைத்துப் பொறுப்புகளையும் வைத்துக்கொண்டு குடும்ப ஆட்சி நடத்துகின்றனர் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். "முதலமைச்சர் முதல் துணை முதலமைச்சர் வரை அமைச்சர்கள் ரசிகர் மன்றத் தலைவர்களைப் போல் செயல்படுகிறார்கள். இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று பேசுகிறார்கள்" என்று அவர் கூறினார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மின்கட்டணம் 67%, சொத்துவரி 100%, கடைகளுக்கான சொத்துவரி 150% உயர்த்தப்பட்டுள்ளது என்றும், குப்பைக்கும் வரி விதித்து மக்களை தி.மு.க. அரசு சுரண்டுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
வேலைவாய்ப்பு: தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாகவும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நிலை மாற்றப்படும் என்றும் உறுதி அளித்தார்.
ஜல்லிக்கட்டு: அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக்கட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
காவிரிப் பிரச்னை: காவிரி நதிநீர் உரிமையை சட்டப் போராட்டம் நடத்திப் பெற்றுத் தந்தது அ.தி.மு.க.தான் என்றும், இதன் மூலம் 20 மாவட்ட மக்கள் குடிநீர் வசதி பெற்று வருகின்றனர் என்றும் கூறினார்.
டெல்டா மாவட்டங்கள்: மு.க.ஸ்டாலின் மீத்தேன் எடுக்க கையெழுத்திட்டார் என்றும், ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக, "இரட்டை இலைக்கு வாக்களிப்போம், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்று அவர் கூறி தனது உரையை முடித்தார். இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் குமார், மனோகரன், விஜயபாஸ்கர், செம்மலை, தங்கமணி, பரஞ்சோதி, கோகுலஇந்திரா, வளர்மதி உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.