அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி அணிகள் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இ.பி.எஸ் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில் ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
அ.தி.மு.க-வில் ஜூன் 27ம் தேதி தொடங்கிய புயல் கரையைக் கடந்துவிட்டதாகத் தோன்றினாலும் இன்னும் ஓயவில்லை. அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பை கைப்பற்ற முனைந்து அதில் கிட்டத்தட்ட அதை அடைந்தும் விட்டார். ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின்படி இ.பி.எஸ் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். அ.தி.மு.க தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான், அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக, அ.தி.மு.க-வில் இ.பி.எஸ் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கவனம் பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க உள்கட்சி விவகாரத்தை சட்டப்பேரவைக்குள் கொண்டுவரக் கூடாது, மக்கள் பிரச்னையை மட்டுமே பேச வேண்டும் என இ.பி.எஸ் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அ.தி.மு.க தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அக்டோபர் 17 மற்றும் 26 தேதிகளில் அ.தி.மு.க சார்பில் பொதுக்குழு கூட்டம் நடத்த கட்சி நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ் அறிக்கை மூலம் உத்தரவிட்டிருந்தார்.
அதே போல, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை பல்வெறு நிகழ்ச்சிகளை சந்தித்து வருகிறார். இ.பி.எஸ் ஆதரவாளராக அறியப்பட்ட முன்னாள் எம்.பி மைத்ரேயன், ஓ.பி.எஸ்-ஐ சந்தித்து அவருடைய ஆதரவாளராக அடையாளப்படுத்திக்கொண்டார். இ.பி.எஸ், மைத்ரேயனை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இருவரும் தனி தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவதால் இருவரின் வியூகம் என்னவாக இருக்கும் என்ற அரசியல் களத்தில் கேள்விகளும் யூகங்களும் எழுந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”