Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க, தே.மு.தி.க புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலை அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க ஆகிய இரு கட்சிகளும் புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EPS and Pramalatha

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க ஆகிய இரு கட்சிகளும் போட்டியிடப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த நிர்வகியான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் உடல்நல பாதிப்பால் கடந்த 2024 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 5-ஆம் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக தி.மு.க வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார். அந்த வகையில், தி.மு.க சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என ஸ்டாலின் அறிவித்தார்.

Advertisment
Advertisement

இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணிப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழக நிறுவனத் தலைவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு மாபெரும் பேரியக்கமான "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" தொடர்ந்து மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருகிறது.

மறைந்த கருணாநிதியின் காலந்தொட்டு, தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் 'அராஜகம், வன்முறை என்றாலே தி.மு.க - தி.மு.க என்றாலே அராஜகம், வன்முறை' என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துகொண்டு வருவதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க ஆட்சிக் காலங்களில், தி.மு.க-வினரால் நிகழ்த்தப்பட்ட அராஜக, வன்முறைச் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை.

கடந்த முறை நடைபெற்ற ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி தி.மு.க-வின் மிரட்டல், அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது.

தி.மு.க-வினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படமாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. இவ்வாறு, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து, மக்களாட்சியின் மகத்துவத்தை மறந்து, வன்முறையில் ஈடுபடுவது மட்டுமே தி.மு.க-வினரின் வாடிக்கை.

நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க-வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், தி.மு.க-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்; பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 5.2.2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.   

 

 

இதேபோல், தே.மு.தி.க-வும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாது என அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை தி.மு.க நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். 

அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்க போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தே.மு.தி.க புறக்கணிக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Erode Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment