சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி வீரப்பம்பாளையம் பகுதியில் எடப்பாடி நகர அ.தி.மு.க சார்பில் செயல் வீரர்கள், செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், "தி.மு.க.வில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது. தி.மு.க.வில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. தி.மு.க கட்சியை வளர்த்தவர்கள், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், மூத்த அமைச்சர்கள் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு கருணாநிதி குடும்பத்தில் பிறந்த மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதியை இன்றைக்கு துணை முதலமைச்சராக்கி இருக்கிறார்கள். அங்கு சர்வாதிகாரம் தலைதூக்கி இருக்கின்றது.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்தது உதயநிதி இளவரசராக இருக்கின்றார். உதயநிதி முதலமைச்சர் என்கிற ஸ்டாலினுடைய கனவு ஒருபோதும் தமிழகத்தில் பலிக்காது. தி.மு.க வில் கருணாநிதி தலைவராக இருக்கும்போது ஸ்டாலினை வளர்த்துவதற்கு கட்சியில் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். 20 ஆண்டு காலம் ஸ்டாலின் அந்த கட்சிக்காக உழைத்தார். இதை இல்லை என்று நாங்கள் மறுக்கவில்லை. அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். மேயராக இருந்தார்.
எதிர்கட்சி தலைவராக இருந்தார். அப்புறம்தான் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இதற்கு ஸ்டாலினுக்கு 20 ஆண்டுகாலம் தேவைப்பட்டது. ஆனால் கட்சிக்காக பாடுபடாமல் தி.மு.க என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு, கருணாநிதி குடும்பம் என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் என பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்தியாவிலேயே மன்னராட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் மன்னராட்சி என்பது ஒருபோதும் எடுபடாது. அதற்கு மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். குடும்ப கட்சியாக தி.மு.க மாறிவிட்டது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக அமையும். எந்த ஆட்சி சிறந்தது என்று எடைபோட்டு மக்கள் வாக்களிப்பார்கள்" என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“