Advertisment

'இவர் எல்லாம் ஒரு தலைவரா? கேவலமா இருக்கு!': ஓ.பி.எஸ்-ஐ போட்டுத் தாக்கிய இ.பி.எஸ்

ஓ.பி.எஸ் தனக்கு நன்மை என்றால் மட்டுமே எதையும் ஏற்றுக்கொள்வார்; கட்சியின் விசுவாசியாக அவர் ஒருபோதும் இருந்ததில்லை –இ.பி.எஸ் தாக்கு

author-image
WebDesk
New Update
Edappadi Palaniswami, o panneerselvam, eps petition at supreme court, aiadmk general council meeting, ஓ.பி.எஸ் தரப்பு செயல்பாடு எம்.ஜி.ஆர்-ன் நோக்கத்துக்கு எதிரானது, உச்ச நீதிமன்றத்தில் இ.பி.எஸ் மேல்முறையீட்டு மனு, ஓ.பி.எஸ், Edappadi Palaniswami petiton at Supreme court, OPS supporters activities are against admk founder mgrs vision

EPS attacks OPS and says selfish: ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க,வின் கைக்கூலியாக செயல்படுகிறார் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Advertisment

அ.தி.மு.க சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் பேசிய இ.பி.எஸ், சுயநலக்காரர் என ஓ.பி.எஸ்-ஐ தாக்கி பேசினார்.

இ.பி.எஸ் பேசியதாவது, கழகம் வலிமையடைய வேண்டும். கழகத்தை காக்க கூடிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். சில எட்டப்பர்கள் எதிரிகளோடு உறவு வைத்துக் கொண்டு கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார்கள். அதனை முறியடிக்கவே ஒற்றை தலைமை கோரிக்கை எழுப்பப்பட்டது.

ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த என்னை, ஒற்றை தலைமையாக இடைக்கால பொதுச்செயலாளாராக பொதுக்குழு நியமித்துள்ளது. கட்சியில் எந்த தொண்டனும் வெளியேறவில்லை. கட்சியை அழிக்க நினைப்பவர்கள் தான் வெளியேறியுள்ளார்கள்.

நான் முதலமைச்சராக இருந்தபோது, அ.தி.மு.க ஆட்சி நிலைக்காது என ஸ்டாலின் கூறினார். ஆனால் ஸ்டாலினே அதிர்ந்துபோகும் அளவிற்கு சிறப்பாக ஆட்சியை முடித்தோம்.

ஒற்றை தலைமை பிரச்னை எழுந்தபோது, கழக மூத்த தலைவர்கள் அண்ணன் ஓ.பி.எஸ்-ஸிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நாம் சமாதானமாக இருக்கலாம். கட்சி நலனுக்காக ஒற்றை தலைமை தேவை, அந்த பொறுப்பில் நாம் யார் வேண்டுமானலும் இருக்கலாம், அதற்கு நீங்கள் இசைவு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஆனால் அதற்கு ஓ.பி.எஸ் ஒத்துழைக்கவில்லை. ஒற்றை தலைமையால் ஏற்பட்ட கஷ்டங்கள் என்ன என எனக்கும் நிர்வாகிகளுக்கும் தெரியும். கட்சி தொண்டர்களின் விருப்பத்தால் தான் ஒற்றை தலைமை கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ் எதையும் விட்டுக்கொடுத்ததில்லை, நாங்கள் தான் விட்டுக்கொடுத்தோம். அம்மாவின் விசுவாசியாகவும் ஓ.பி.எஸ் இருந்ததில்லை. 1989ல் ஜெயலலிதா தேர்தலைச் சந்தித்தப்போது, அவருக்கு எதிராக போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவின் ஆதரவாளராக இருந்தவர் ஓ.பி.எஸ்.

அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்ட ஓ.பி.எஸ்-ம் நானும் அழைப்பு விடுக்கிறோம். ஆனால் பிறகு ஓ.பி.எஸ் பொதுக்குழு நடக்க கூடாது என நீதிமன்றம் சென்றார். காவல்துறையில் புகார் அளிக்கிறார். கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவர், கட்சி கூட்டம் நடக்க கூடாது என தடை கேட்டது இந்தியாவிலே ஓ.பி.எஸ் ஒருவர்தான். இது என்ன அவரது கம்பெனியா? ஓ.பி.எஸ் சுயநலக்காரர், தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்க கூடாது என நினைப்பவர்.

நாம் தி.மு.க ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்து வரும் நிலையில், ஓ.பி.எஸ் மகன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, சிறப்பாக ஆட்சி நடத்துவதாக கூறினார். ஓ.பி.எஸ், தி.மு.க.,வுடன் உறவு வைத்துள்ளார். ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டது. தலைமை கழக நிர்வாகிகள் அந்த பொறுப்புகளை கவனித்து வருகின்றனர். முன்னர் இரு அணிகளாக இருந்தபோதைய, அதே நிலை தான் இப்போதும். அப்போது சரி என ஓ.பி.எஸ் சொன்னார். இப்போது தவறு என்கிறார். அவருக்கு நன்மை என்றால், சரி என்பார். இல்லை என்றால் வேண்டாம் என்பார்.

சிறப்பு பொதுக்குழுவிற்கு ஓ.பி.எஸ்-க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் பொதுக்குழுவுக்கு வராமல் ரவுடிகளுடன் தலைமை கழகம் சென்று கட்சி நிர்வாகிகளை தாக்கியுள்ளார். தலைமை கழகத்தை உடைத்துள்ளார். ஆவணங்களை எடுத்துச்சென்றுள்ளார். சொந்தக் கட்சி அலுவலகத்தில் கொள்ளை அடிக்கும் ஓ.பி.எஸ் விசுவாசியா? தி.மு.க.,வின் கைக்கூலியாக ஓ.பி.எஸ் செயல்படுகிறார். அவரை கட்சியிலிருந்து நீக்கும் எண்ணம் இதுவரை இருந்ததில்லை. ஆனால் இந்த நிகழ்வுகளுக்கு பிறகு தான் நீக்கியுள்ளோம். இவ்வாறு இ.பி.எஸ் பேசினார்.

பின்னர் தலைமை கழகத்தில் நடந்த மோதலில் காயமடைந்த ஆதரவாளர்களை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இ.பி.எஸ் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இ.பி.எஸ், காவல்துறையிடம் மனு அளித்தும் தலைமை அலுவலகத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அதிமுக சிறப்பு பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓ.பி.எஸ் ரவுடிகளுடன் அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களை தாக்கியுள்ளார். இது கண்டனத்திற்குரியது. இந்தியாவிலேயே எந்தக் கட்சியிலாவது, கட்சி தொண்டர்களை தலைவர்கள் தாக்குவார்களா? தொண்டர்கள் தான் ஓ.பி.எஸ் இதுவரை அனுபவித்து வந்த அதிகாரத்தை வழங்கியவர்கள். அவர்களை கொடூரமான முறையில் தாக்கியது என்பது மிருகத்தனமான மனிதனுக்கு தான் அந்த எண்ணம் வரும். ஓ.பி.எஸ் ஒரு சுயநலவாதி. ரவுடிகள் தாக்குதலை காவல்துறை தடுக்கவில்லை. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் தி.மு.க.,வுடன் இணைந்து இந்த கொடூரங்களை செய்துள்ளார். அ.தி.மு.க.,வை அழிக்க துரோகிகளுடன் சேர்ந்து ஸ்டாலின் போட்ட திட்டம் தான் இந்த தாக்குதல்.

தாக்குதலுக்கு முழு பொறுப்பு ஆளும் கட்சியும், துரோகி ஓ.பி.எஸ்-ம் தான். ஓ.பி.எஸ் ஒரு சுயநலவாதி, யாருக்கும் நன்மை செய்தது கிடையாது. ஓ.பி.எஸ் தலைமை அலுவலகத்தில் வந்து ரவுடிகளுடன் ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளார். ஆவணங்களை ஓ.பி.எஸ் அள்ளிச்சென்றது கேவலமான செயல். அதற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கிறது. யார் தவறு செய்தாலும் தக்க பாடம் புகட்டுவோம். அதிமுக அலுவலகத்தை நீதிமன்றத்தை நாடி, மீண்டும் திறப்போம். இவ்வாறு இ.பி.எஸ் பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment