தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வட மாநிலங்களில் இருந்து தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் செய்யபட்டு விநியோகிக்கப்படுகிறது என்று புகார் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி நேரடியாக மக்கள் சொன்ன கருத்துக்களைக் கேளுங்கள் என்று வீடியோ ஒன்றை செய்தியாளர்களிடம் போட்டு காட்டினார். அதில், பொங்கல் பரிசுத் தொகுப்பு தரம் குறித்த வீடியோ ஒளிபரப்பானது.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. 21 பொருட்கள் தருவதாக அறிவித்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் முழுமையாக, வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், வட மாநிலங்களில் இருந்து தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் செய்யபட்டு விநியோகிக்கப்படுகிறது என்று புகார் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் பல இடங்களில் நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது. அதில், பொதுமக்களுக்கு வழங்கப்படவேண்டிய இரண்டரை டன் வெல்லம் மிக மோசமாக, தரமற்று இருக்கிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர்களே ஆய்வு செய்து ரத்து செய்துள்ளனர் என்ற தகவல்கள் எல்லாம் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது. ஓமலூரில் ரேஷன் கடையில் தரமற்ற வெல்லம் கொடுத்திருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் எப்படி பொங்கல் வைக்கமுடியும். புளியில் பல்லி இருந்ததாகச் செய்தி வெளியானது. கொடுக்கக்கூடிய பொருட்களின் எடையும் குறைவாக உள்ளது. நியாய விலைக்கடை ஊழியர்களே இதற்கு போராட்டம் பண்ணியிருக்கிறார்கள்.
குறிப்பாக வடமாநிலத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வாங்கி பொதுமக்களுக்கு தரமற்ற முறையில் விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலமாக கமிஷன் கிடைப்பதால் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். கரும்பு வழங்குவதிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் திமுக அரசு கொள்ளை அடிப்பது தான் மிச்சம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த பிறகும் இது போன்று பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்ற பொருட்களையே வழங்குகிறார்கள். ஏழை எளிய மக்கள் பயன்படுத்துவதற்காக வேட்டி, சேலை பொங்கல் பண்டிகையில் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வேட்டி சேலை வழங்கப்படவில்லை.
திமுக அரசு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக அரசு பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று அறிவித்து அதற்கு அபராதமும் விதித்தோம். ஏற்கனவே, நான் கொண்டுவந்த பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விளம்பரத்துக்காக செயல்படுகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான பொய் வழக்கு திட்டமிட்டு போடப்பட்டது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் காவல்துறையினரை தவறாக பயன்படுத்தி வருகிறது. திமுக அரசை பொறுத்தவரை விளம்பரம் மட்டுமே, முதலமைச்சர் டீ குடிப்பதற்கும், சைக்கிள் ஓட்டும் போதும் தனது பாதுகாப்புக்காக 500 காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு கரோனா பரவலை சரியான வழியில் கட்டுப்படுத்த தவறிவிட்டது.
ஏற்கெனவே, கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியதை பயன்படுத்தி தான் தற்போது கட்டுப்படுத்தினார்கள் தனியாக எதுவும் வாங்கவில்லை. ஆனால், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதிமுக அரசின் ஆலோசனைகள் பெற்று இருந்தால் கொரோனா பாதிப்பு இவ்வளவு வந்திருக்காது. தமிழக அரசு எல்லாவற்றிற்கும் குழுக்கள் மட்டுமே அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், செயல்பாடுகள் இல்லை. திறமை இல்லாத அரசாங்கமாக திமுக அரசாங்கம் உள்ளது. நாட்டிற்கு வழிகாட்டியாக செயல்படும் அரசாங்கம் என்று கூறுகிறார் ஸ்டாலின். ஆனால், பொங்கல் பரிசுப் பொருட்களை தரமற்றதாக கொடுப்பதுதான் வழிகாட்டியா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆன்லைன் சூதாட்டம் தடுக்க அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திறம்பட வாதாடததால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் வந்துவிட்டது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் கட்டி முடிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரியில் கல்லூரியும் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டவை தான்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“