/indian-express-tamil/media/media_files/maCmmxgfuckzHTdsoZP3.jpg)
சென்னை தீவுத்திடல் பகுதியில் வரும் 9,10-ம் தேதிகளில் ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார் பந்தயம் நடக்க உள்ளது. இந்நிலையில் கார் பந்தயம் நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் அங்கிருக்கும் தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டு, சாலை மறு சீரமைப்பு செய்ய ரூ.42 கோடி செலவு செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் வரிப் பணத்தில் சாலை மறு சீரமைப்பதற்கு அ.தி.மு.க கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் தண்ணீரில் மிதக்கிறது. தி.மு.க அரசு வடிகால் தூர் வாரும் பணிகளை முறையாக செய்யவில்லை. நிர்வாகத் திறன் இல்லாமல் ஊழல் தி.மு.க அரசாக உள்ளது. சென்னை தீவுத்திடல் பகுதியில் கார் பந்தயம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது வேடிக்கை உள்ளது. இதற்காக ரூ.242 கோடி செலவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசாங்கம் ரூ.42 கோடியில் சாலை சீரமைப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கார் பந்தயத்திற்கு அரசு ரூ.42 கோடி செலவு செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஏற்கனவே இருங்காட்டு கோட்டையில் கார் பந்தயம் நடத்த தனி ஓடுதளம் உள்ளது. அங்கு இடம் இருக்கும் போது தேவையில்லாமல் சென்னை மாநகரில் பந்தயம் நடத்தப்படுகிறது. இதற்காக சாலை சீரமைப்புக்காக அரசு பணம் வீண் செலவு செய்வது கண்டிக்கத்தக்கது.
கார் பந்தயத்திற்கு ரூ.42 கோடி அரசு செலவு செய்வது எவ்விதத்தில் நியாயம். சென்னை மாநகரில் அம்மா உணவகத்திற்கு முறையாக நிதி ஒதுக்காமல் அங்கு உணவகம் மூடப்பட்டுள்ளது. கார் பந்தயத்தை மேல்தட்டு மக்கள் பார்ப்பார்கள். ஏழை, எளிய மக்கள் வீடு, முறையான வடிகால் வசதி இல்லாமல் சிரமப்படுகிறார்கள். மக்கள் வரிப் பணம் வீணாக்கப்படுகிறது.
மழையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏழை மக்களுக்கு கார் பந்தயத்தால் எந்த பயனும் இல்லை. மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம். தமிழ்நாடு அரசு, ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.