EPS condemns former CM MGR statue removed in Thanjavur: தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர் சிலையை பெயர்த்து கீழே தள்ளிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், இச்சம்பவத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் வடக்குவீதி பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சிமெண்ட்டால் செய்யப்பட்ட மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அப்பகுதி வழியே சென்றவர்கள், எம்.ஜி.ஆர் சிலை காணாமல் போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் சிலை பெயர்த்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த அதிமுக கரந்தை பகுதிச் செயலாளர் அறிவுடை நம்பி, கோட்டை பகுதிச் செயலாளர் புண்ணியமூர்த்தி, 8-வது வார்டு செயலாளர் சங்கர் மற்றும் ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
பின்னர், காவல்துறையினரும் அதிமுகவினரும் பெயர்க்கப்பட்ட சிலை பீடத்தின் பின்புறம் கிடந்ததை கண்டுபிடித்தனர். அந்த சிலையை மீண்டும் அதே இடத்தில் அதிமுகவினர் வைத்தனர்.
இதுகுறித்து அதிமுகவினர் போலீஸில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர் சிலை பெயர்க்கப்பட்டதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன், புரட்சித்தலைவர் அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும்,பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்டநடவடிக்கை எடுக்க இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இத்தகைய விஷமச்செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.