முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
அதிமுக ஆட்சியின் ஊழல்களை மறைக்கும் வகையில் ஈ.பி.எஸ்., பேசுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய சிங்கப்பூர் பயணத்தை சுட்டிக்காட்டி, முதலீட்டை ஈர்க்கப்போகிறாரா அல்லது முதலீடு செய்யப்போகிறாரா, என்று கேள்வி எழுப்பினார்.
ஈ.பி.எஸ்.,இன் விமர்சனத்திற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "அதிமுக ஆட்சியின்போது தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு விரட்டி அடித்தனர்.
4 ஆண்டு ஆட்சியில் ஊரெங்கும் ஊழல் என்ற முழக்கத்துக்கு சொந்தக்காரராக கரன்சி மழையில் நனைந்து ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தவர் எடப்பாடி பழனிசாமி என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை மறைப்பதற்காகவும் முன்னாள் அமைச்சர்களின் மேல் உள்ள சொத்துக்குவிப்பு வழக்குகளை திசை திருப்புவதற்குத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்து அவதூறு பரபரப்புவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
"முதலீடு" என்றால் தனக்குக் கிடைக்கும் ஊழல் பணம் மட்டுமே என அகராதியில் புதிய அர்த்தம் கண்டுபிடித்த பழனிசாமி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை பெறப்போகும் முதலமைச்சர் மீது அவதூறு பேசுகிறார். 13 நாள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு அவரது மகன் மிதுன் அங்கு போனது பழனிசாமியின் ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத்தானோ என்ற கேள்வி இப்போது எழுகிறது. 2015-ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு "அதிமுக மாநாடு"! எடப்பாடி பழனிசாமி இருந்தபோது நடத்திய 2019-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு எடுபடாத மாநாடு!
போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எனக் "கணக்கு" காட்டப்பட்டதே தவிர, வந்த முதலீடுகள் எவ்வளவு என்று நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்தால் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக லட்சணமும், அவர் முதலீட்டை ஈர்த்த மாயத்தோற்றமும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. இதனைத் தொழில்துறை அமைச்சராக இருந்த நான் பல முறை சுட்டிக் காட்டியிருக்கிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி நடத்தியது உலகச் சுற்றுலா மாநாடு! அதிமுகவின் அமைச்சரவையையே ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு அனுப்பி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கபட நாடகம் நடத்திச் "சுற்றுலா" சென்றது ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தானா?
ஜனவரி 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடச் செல்லும் முன்பு துபாய் போனபோது எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்பதை பட்டியலிட்டுள்ளார். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாள் பயணமாகப் புறப்படும் முன்பு பத்திரிகைக் குறிப்பு வாயிலாகவும். விமான நிலையத்தில் பேட்டி வாயிலாகவும், இதுவரை தொழில் துறையில் பெற்ற முதலீடுகள் - போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவித்து விட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் இது எதையுமே படிக்காத எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் நாள்தோறும் உழைக்கும் முதலமைச்சரைப் பார்த்து தரக்குறைவாக அவதூறாக கீழ்தரமாகப் பேசி அரசியல் நாகரிகத்திற்கும் தனக்கும் ஆயிரம் மைல் தொலைவு என்பதை வெளிப்படுத்தியுள்ளார்", என்று தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.