பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க கட்சி ஆரம்பிக்கப்பட்டப்போது, நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் தலைவர் பதவியை பேரறிஞர் அண்ணாவுக்கு ஒதுக்கிவிட்டு, பொதுச் செயலாளர் பதவிக்கு முழு அதிகாரம் அளித்து, அவரே அந்தப் பதவியில் பொறுப்பேற்றார். தலைவர் பதவிக்கு பதிலாக அவைத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: அ.தி.மு.க 8-வது பொதுச் செயலாளர் இ.பி.எஸ்: இதுவரை இந்தப் பதவியை அலங்கரித்தவர்கள் யார் யார்?
அ.தி.மு.க.,வில் அதிக அதிகாரம் பெற்றதாக பொதுச்செயலாளர் பதவி உள்ளது. கட்சியில் பதவி நியமனங்கள், பதவி மாற்றங்கள், பதவி பறிப்பு ஆகியவற்றை செய்யும் அதிகாரம் பொதுச் செயலாளர் பதவிக்கே உள்ளது.
தேர்தல் தொடர்பான முடிவுகள், கூட்டணி தொடர்பான முடிவுகள் உள்ளிட்டவற்றை எடுக்கும் அதிகாரமும் பொதுச் செயலாளருக்கே உள்ளது. இதனால் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க கட்சி விதிகளின் படி பொதுக்குழுவுக்கே அதிக அதிகாரம் உள்ளது என்றாலும், பொதுக்குழு மேற்கூறிய கட்சி பதவி நியமனங்கள் முதல் தேர்தல் வரையிலான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை பொதுச் செயலாளாரிடம் வழக்கமாக வழங்கி வருகிறது. இதனால் பொதுச்செயலாளர் பதவியே கட்சியின் உச்ச அதிகாரமாக உள்ளது.
இத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்தப் பொதுச் செயலாளர் பதவியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் அலங்கரித்துள்ளனர்.
பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள்
1) அ.தி.மு.க சட்டவிதி எண் 20ன் தொடக்கத்திலேயே கட்சியின் அனைத்து நிர்வாகங்களுக்கும் பொதுச் செயலாளர்தான் பொறுப்பு என அழுத்தமாக கூறப்பட்டுள்ளது.
2) பொதுச் செயலாளர் நிர்வாக வசதிக்கேற்ப கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் யாரை வேண்டுமானால் துணைப் பொதுச் செயலாளர்கள் பதவிக்கும், தலைமை நிலையச் செயலாளர் பதவிக்கும் நியமிக்கலாம். துணைப்பொதுச் செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தீர்மானிக்கும் அதிகாரமும் பொதுச் செயலாளரிடமே உள்ளது.
3) அ.தி.மு.க தலைமை பொறுப்பில் மற்றொரு அதிகாரமிக்க பதவியான பொருளாளர் பதவியையும் பொதுச் செயலாளரால் நியமிக்கப்படுபவரே அலங்கரிக்க முடியும்.
4) தன்னால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள், பொருளாளரை நீக்கும் அதிகாரமும் பொதுச் செயலாளருக்கும் உண்டு.
5) கட்சியில ஒருவர் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையில் இறுதி அதிகாரம் எடுக்கும் அதிகாரமும் பொதுச் செயலாளர் வசமே உள்ளது.
6) துணைப்பொதுச் செயலாளர்கள் தவிர்த்து, நிர்வாகத்தில் தனக்கு உதவியாக இருப்பதற்காக துணை செயலாளரையும் அ.தி.மு.க பொதுச் செயலாளரால் நியமிக்க முடியும்.
7) கட்சியின் பல்வேறு உட்கட்சி அமைப்புகளில் இணை, துணைச் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரத்தையும் பெற்றுள்ளார்.
8) அ.தி.மு.க உட்கட்சி தேர்தலுக்கான தேதி மற்றும் அறிவிப்பை பொதுச் செயலாளரே வெளியிடுவார்.
9) அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டு அதிகாரமும் பொதுச் செயலாளருக்கு உண்டு.
10) செயற்குழு உறுப்பினர்களை பொதுச் செயலாளரே நியமிக்கலாம்.
11) கட்சியில் உட்கட்சி தேர்தல் முடிந்து எந்த பிரிவிலாவது பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவதாக தெரிந்தால் அங்கு போதிய எண்ணிக்கையில் பெண்களுக்கான நியமன பதவிகளை உருவாக்கவும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் அதிகாரம் பெற்றுள்ளார்.
12) கட்சியின் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பான முடிவுகளை எடுக்கவோ அல்லது வங்கியில் பணம் டெபாசிட் செய்வது, கட்சி செலவுகளுக்காக வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது போன்ற பணிகளை தானே நேரடியாக மேற்கொள்வோ அல்லது பொருளாளர் மூலம் மேற்கொள்ளவோ பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு,
13) அவசர சூழல்கள், அரசியல் மாறுதல்களை கருத்தில் கொண்டு கட்சியில் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். யாரையும் கட்சியிலிருந்து நீக்கவும், கட்சியின் எந்த அமைப்பையும் செயல்படாமல் நிறுத்திவைக்கவும் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு. முதலில் இந்த நடவடிக்கைகளை செயல்படுத்திவிட்டு பின்னர் பொதுக் குழுவில் அதற்கான அனுமதியைப் பெறலாம்.
14) தேர்தல்களின்போது வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் பொதுச் செயலாளரின் கையெழுத்து அவசியம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.