scorecardresearch

தானியங்கி மெஷின் மூலமாக மது விற்பனை வெட்கக் கேடு: இ.பி.எஸ் கடும் கண்டனம்

இயந்திரத்தில் பணம் செலுத்தி மதுபானம் பெரும் வகையில் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

edapaadi pazhanisamy

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை மையத்தை டாஸ்மாக் நிர்வாகம் தொடங்கியது. இயந்திரத்தில் பணம் செலுத்தி மதுபானம் பெரும் வகையில் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க., ஆட்சி, மக்கள் நலனுக்காக செயல்படுவதற்கு பதிலாக, தமிழக மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.

இந்த விடியா திமுக ஆட்சியில், தமிழ் நாட்டை போதைப் பொருட்களின் கேந்திரமாக மாற்றிவிட்டார்கள். இதனால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை பெருகி உள்ளதை பலமுறை நான் சட்டமன்றத்திலும், ஊடகத்தின் வாயிலாகவும் கட்டிக் காட்டியுள்ளேன்.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மாணவர்களுக்கும், 21 வயது குறைந்தவர்களுக்கும் மதுபானங்களை விற்கக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கின்ற நிலையில், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையைத் துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த விடியா திமுக அரசு, திருமண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும் மதுபானம் அருந்தலாம் என்ற அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடைக்கு தானியங்கி மது விற்பனை மையம், அதாவது இயந்திரம் மூலம் மது வகைகளை விற்பனை செய்வதற்கான தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் வந்துள்ள செய்திகள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில், டாஸ்மாக் தானியங்கி இயந்திரம் மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற அடிப்படை யோசனைகூட இந்த அரசுக்கு இல்லையா? ஏற்கனவே பள்ளி மாணவ, மாணவியர் சீருடை அணிந்தே மதுபானங்கள் அருந்துவது ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

சாதாரண குளிர்பானங்களை அருந்துவதே உடல் நலத்திற்குக் கேடு என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வரும் நிலையில், மதுபானங்களை தாராளமாக பயன்படுத்தி இளைஞர்களைத் தூண்டுகிறது இந்த விடியா திமுக அரசு.

மக்கள் நலனையோ, இளைஞர்களின் எதிர்காலத்தையோ, தமிழ் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையோ கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மக்களைப் பற்றி கொஞ்சம்கூட அக்கறை கொள்ளாமல் வருவாயை மட்டுமே கருத்தில்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.

நவீனமயமாகி வரும் கல்வித் துறை, சுகாதாரத் துறைகளில் கூட இதுவரை எந்த ஒரு நவீன திட்டத்தையும் இந்த விடியா அரசு கொண்டு வந்ததாகத் தெரியவில்லை.

கொலைக் களமாக மாறிவரும் தமிழகத்தில், மதுவால் ஏற்படும் மரணங்களைப் பெருக்கி, தன் அரசின் மற்றும் தனிப்பட்ட கஜானாவை நிரப்ப, மக்களைக் குறிவைத்து திட்டம் தீட்டி செயல்படும் இந்த அடாவடி அரசை, அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்”, என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Eps opposes alcohol vending machine in chennai