அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கழகத்தில் இணைய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இ.பி.எஸ், ஓ.பி.எஸ் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "பதவிக்காக செயல்படும் சிந்தனை நம்மில் யாருக்கும் கிடையாது. மக்கள் தொண்டு தான் நமது குறிக்கோள். அந்த குறிக்கோள் நிறைவேற உயர்நீதிமன்ற தீர்ப்பு நமக்கு உதவுகிறது என்பதனால் நாம் அதனை வரவேற்று கொண்டாடுகிறோம்.
'நீர் அடித்து நீர் விலகுவதில்லை. நமக்குள் உள்ள வேறுபாடுகளையும், மனமாச்சரியங்களையும் புறந்தள்ளிவிட்டு நாம் ஒன்றுபட்டு உழைக்கும் போது, தேர்தல் களத்தில் நம் அரசியல் எதிரிகளை வீழ்த்தும் பெரும்படையாக உருவாகும்.
சில தவறான வழிநடத்தல்களின் விளைவாகவும், ஆங்காங்கே கழக உடன்பிறப்புகளிடையே நிலவிய சிறு சிறு கசப்புகளை மறந்து ஐகோர்ட் தீர்ப்பின் எதார்த்தத்தை புரிந்து கொண்டு, மீண்டும் வந்து கழகத்தில் இணைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன், "எங்களைப் பார்த்து அவர்கள் பயந்துவிட்டார்கள் போல. நாங்கள் தேர்தலை சந்திக்கலாம் என்றிருக்கிறோம். மீண்டும் வந்து எங்களுடன் இணையுங்கள் இப்போது அழைக்கிறார்கள். முதலில் எங்களை இப்படி அழைப்பதற்கே அவர்களுக்கு தகுதி இல்லை. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் யாரும் மீண்டும் திரும்பி வர மாட்டார்கள்" என்றார்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறுகையில், "நாங்கள் டிடிவி தினகரனை திரும்ப அழைக்கவில்லை. தொண்டர்களைத் தான் திரும்ப தாய் கழகத்திற்கு அழைத்திருக்கிறோம்" என்றார்.
தொடர்ந்து தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறுகையில், "அதிமுகவை மீட்டு தான் எடுப்போமே தவிர, அவர்களிடம் மீண்டும் சேர மாட்டோம். அவர்களின் ஆசை ஈடேறாது. அது ஒரு புதைக்குழி, அங்கே போனால் அழிந்து தான் போக வேண்டும். நாங்கள் அங்கே போய் சேரமாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.