இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே மோதல் என வெளியான தகவலை அமைச்சர் ஜெயகுமார் மறுத்தார். இருவருக்கும் இடையே சிண்டு முடிய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சமீப நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்கவில்லை. கோவில்பட்டியில் அரசு நிகழ்ச்சி, ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி தொடக்க விழா, கோவையில் போலீஸ் மியூசியம் தொடக்க விழா, சென்னை தலைமைச் செயலகத்தில் சொகுசு சிற்றுந்து தொடக்க நிகழ்ச்சி ஆகியவற்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியாகவே கலந்து கொண்டார்.
இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கடைசியாக மே 7-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஒன்றாக கலந்து கொண்டனர். அதன் பிறகு இருவருக்கும் இடையே மனக் கசப்புகள் அதிகமானதாகவும், அதன் எதிரொலியாகவே கர்நாடகாவில் பாஜக.வின் வெற்றியை ‘பிரமாண்டமான நுழைவு’ என ஓபிஎஸ் வர்ணித்ததாகவும் தகவல்கள் பரவின.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 200 பேர் டிடிவி ஆதரவாளர்கள் என காரணம் காட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அந்த இடங்களில் இன்னும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. அதிமுக.வில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு நியமனம் செய்யப்படும் என பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. அதையும் செய்யவில்லை. ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்க தோதாக மாவட்டங்களை பிரிக்க எடுத்த முயற்சிகளும் நடக்கவில்லை.
இது போன்ற விவகாரங்களே இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே பூசலாக உருவெடுத்துவிட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக இன்று அமைச்சர் ஜெயகுமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஜெயகுமார், ‘அப்படி எதுவும் இல்லை. இந்த சிண்டு முடிகிற வேலையை யாரும் செய்ய வேண்டாம். அம்மா வழியில் இயக்கத்தை பாதுகாத்து வருகிறோம்’ என்றார்.