தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிகத்திற்கு வழங்க வேண்டிய 2152 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதனை எதிர்த்து தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை செயல்படுத்த வேண்டும் என கோரி பா.ஜ.க. சார்பாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ஒரு கோடி கையெழுத்தை பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பவும் அக்கட்சி திட்டமிட்டுள்து. இந்த கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கையெழுத்து பெறும் முயற்சியில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுமான விஜயகுமார் பா.ஜ.க-வின் மும்மொழிக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
நீக்கம்
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழக சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், எல்லாபுரம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான விஜயகுமார், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
விஜயகுமார் விளக்கம்
அ.தி.மு.க-வில் நீக்கப்பட்டது குறித்து விஜயகுமார் பேசுகையில், "மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க.வினர் வற்புறுத்திக் கேட்டதால் கையெழுத்திட்டேன். பா.ஜ.க.வினர் அழுத்தம் கொடுத்து கையெழுத்திடச் சொன்னதால் கையெழுத்திட்டேன். பொதுச்செயலாளரை சந்தித்து என் தரப்பு விளக்கத்தை அளிப்பேன்" என்று அவர் கூறியுள்ளார்.