Advertisment

தமிழகத்தை குட்டிச் சுவராக்கி விட்டதா அதிமுக? ஸ்டாலின்- இ.பி.எஸ் மோதல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள்” என்று முந்தைய அதிமுக அரசை விமர்சித்த நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு 8 மாதங்களாக சாதித்தது என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
EPS questions dmk govt, eps questions what achieved DMK govt in 8 months, Stalin criticise former AIADMK govt, 10 ஆண்டுகள் குட்டிச் சுவராக்கி விட்டார்கள், ஸ்டாலின் விமர்சனம், 8 மாதங்களில் சாதித்தது என்ன இபிஎஸ் கேள்வி, EPS, Edappadi K Palaniswami, cm mk stalin, tamilnadu, chennai rains, chennai

கனமழை காரணமாக சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள்” என்று முந்தைய அதிமுக அரசை விமர்சித்த நிலையில், திமுக அரசு 8 மாதங்களாக சாதித்தது என்ன என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் மாதத்தில் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக மழை ஓய்ந்திருந்த நிலையில், நேற்று (டிசம்பர் 30) திடீரென பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் திடீரென கனமழை பெய்து பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் உடனடியாக சென்னை திரும்பி அமைச்சர்களுடன், ஆழ்வார்பேட்டையில்பகுதி சாலைகளில் நடைபெற்றும் வரும் மழைநீர் அகற்றும் பணியை ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ன், “வானிலை மையத்தினர் வழக்கமாக முன்னெச்சரிக்கைக் கொடுப்பார்கள். இம்முறை அவர்களே ஏமாந்துள்ளனர். அதற்கு அவர்கள் வருத்தமும் தெரிவித்துளளனர். எதிர்பாராமல் பேய்மழையாய் கொட்டிய மழைநீர் அங்கங்கே தேங்கியுள்ளன. நான் திருச்சியிலிருந்து வந்த உடனே மாநகராட்சி கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள war room-ல் சென்று என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர்களிடம் கலந்து பேசினேன். தற்போது நகரில் தேங்கியுள்ள நீரை அகற்ற அங்கே பம்ப்செட் அமைத்து நீர் அகற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அவர்கள் பணி திருப்தியாக இருக்கிறது. நிச்சயமாக இன்றைக்குள்ளாக அனைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும். சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் இன்றைக்குள் நிறைவடையும்.” என்று கூறினார்.

அப்போது, செய்தியாளர்கள், மீண்டும் மீண்டும் தேங்கியுள்ள இடத்திலேயே நீர் தேங்கியுள்ளது. திட்டமிடாததுதான் காரணமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள். அதைப்பற்றி ஏற்கெனவே கூறியுள்ளோம். அதையெல்லாம் விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை. தற்போது உள்ள பிரச்சினைகளை தீர்க்கவேண்டும். அடுத்த மழைக்காலம் வருவதற்குள் இப்பிரச்சினைக்கெல்லாம் நிச்சயம் தீர்வுகாணப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன” என்று கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள்” என்று முந்தைய அதிமுக அரசை விமர்சித்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு 8 மாதங்களாக சாதித்தது என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒவ்வொரு வடகிழக்குப்‌ பருவமழை தொடங்குவதற்கு முன்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு முன்‌னெச்சரிக்கையாக சென்னை மாநகரத்திற்குத் தனியாகவும்‌, மாவட்ட அளவில்‌ ஆட்சித்‌ தலைவர்களுடனும்‌, காவல்‌ துறை, தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்‌ பணித்துறை, சுகாதாரத்‌ துறை, உள்ளாட்சித்‌ துறை, நெடுஞ்சாலைத்‌ துறை, பொதுப்பணித்‌ துறை, மின்சார வாரியம்‌ உட்பட அனைத்து முக்கியமான துறைகளை பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறையின்‌ கீழ்‌ ஒருங்கிணைத்து, அப்போது முதல்வராக மக்கள்‌ பணியாற்றிய எனது தலைமையில்‌, மூத்த அமைச்சர்கள்‌ மற்றும்‌ துறை அமைச்சர்களுடன்‌ ஆகஸ்ட்‌ மாதத்திலேயே குறைந்தது 5 ஆய்வுக்‌ கூட்டங்களையாவது நடத்துவோம்‌.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்‌ தங்கள்‌ அதிகாரிகளுடன்‌ ஆலோசனைக்‌ கூட்டங்களை நடத்துவார்கள்‌. இது தவிர தலைமைச்‌ செயலாளர்‌ பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து அனைத்துத்‌ துறை அதிகாரிகளுடனும்‌ ஆய்வு செய்வார்‌. இந்த திமுக அரசு, மே மாதமே ஆட்சிப்‌ பொறுப்பை ஏற்றும்‌, வடகிழக்குப்‌ பருவமழை குறித்த ஆய்வுக்‌ கூட்டங்கள்‌ நடத்தப்படவில்லை என்றும்‌, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சரியான அறிவுரைகள்‌ வழங்கப்படவில்லை என்றும்‌, முக்கியமாக சென்னையில்‌ பணிபுரிந்த அதிகாரிகளை முழுவதுமாகப் பணியிட மாறுதல்‌ செய்ததன்‌ விளைவாக, ஏற்பட்ட நிர்வாகக்‌ குளறுபடிகளை எனது முந்தைய அறிக்கையில்‌ குறிப்பிட்டிருந்தேன்‌.

நேற்று ஒரு நாள்‌, பிற்பகல்‌ முதல்‌ பெய்த கனமழையால்‌ சென்னையில்‌ மட்டும்‌ மின்சாரம்‌ தாக்கி 3 பேர்‌ பலியாகி உள்ளனர்‌. ஓட்டேரியில்‌ வசித்து வந்த திருமதி தமிழரசி (வயது - 70) நேற்று மாலை, நியூ பேரன்ட்ஸ்‌ சாலையில்‌ நடந்து சென்றபோது, அப்பகுதியில்‌ தேங்கியிருந்த மழை நீரில்‌ கால்‌ வைத்ததும்‌ மின்சாரம்‌ தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்‌. அதேபோல்‌, புளியந்தோப்பைச்‌ சேர்ந்த திருமதி மீனா (வயது - 40) சாலையில்‌ தேங்கிய மழை நீரில்‌ நடந்து சென்றபோது மின்சாரம்‌ தாக்கி உயிரிழந்துள்ளார்‌.

மேலும்‌, மயிலாப்பூரைச்‌ சேர்ந்த லட்சுமணன்‌ (வயது - 13) என்ற எட்டாம்‌ வகுப்பு பள்ளி மாணவன்‌ நேற்று மாலை வீட்டின்‌ அருகே தேங்கிய மழை நீரில்‌ கால்‌ வைத்ததும்‌ மின்சாரம்‌ தாக்கி உயிரிழந்துள்ளார்‌. மின்சார வாரியத்தின்‌ அலட்சியத்தால்‌ உயிரிழந்த மூவரது குடும்பத்தினருக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தலா 20 லட்சம்‌ ரூபாய்‌ நிவாரண நிதியினை வழங்க வேண்டும்‌ என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்‌.

வடகிழக்குப்‌ பருவமழை 20 நாட்களுக்கு முன்பு சிறிதளவு ஓய்ந்திருந்தது. அப்போதாவது பழுதடைந்த மின்‌ உபகரணங்கள்‌, சாலைகள்‌ மற்றும்‌ வடிகால்களைச் சீரமைத்திருந்தால்‌ இந்த பாதிப்புகளைத்‌ தவிர்த்திருக்கலாம்‌.

ஸ்டாலின்‌எதிர்க்கட்சித்‌ தலைவராக இருந்தபோது வெளியிட்டுள்ள அறிக்கைகளில்‌ கூறியிருக்கும்‌ யோசனைகளை, இந்த 8 மாதங்களில்‌ செயல்படுத்தி இருந்தால்‌ கூட, இந்த 3 உயிரிழப்புகளைத்‌ தவிர்த்திருக்கலாம்‌. மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகளையும்‌ தவிர்த்திருக்கலாம்‌. மின்வாரிய ஊழியர்களின்‌ அலட்சியத்தால்‌ அப்பகுதியில்‌ உள்ள மின்‌ வடங்களில்‌ இருந்து மின்‌ கசிவு ஏற்பட்டதே உயிரிழப்புகளுக்குக்‌ காரணம்‌ எனப் பொதுமக்கள்‌ குற்றம்‌ சாட்டியுள்ளனர்‌. சட்டமன்ற எதிர்கட்சித்‌ தலைவராக இருந்தபோது, சம்பந்தப்பட்ட அமைச்சரைப் பதவி விலகச்‌ சொன்ன இன்றைய முதல்வர்‌, தற்போது இந்த அரசின்‌ மின்சாரத்‌ துறை அமைச்சரை ராஜினாமா செய்யச்‌ சொல்லுவாரா?

மேலும்‌, சென்னையில்‌ நேற்று ஒருநாள்‌ பெய்த கனமழையால்‌ சாலைகளில்‌ ஏற்கெனவே எங்கெல்லாம்‌ மழைநீர்‌ தேங்கியதோ, அந்த இடங்களிலேயே நேற்றும்‌ தேங்கியது. சென்னையில்‌ பொதுமக்கள்‌ நேற்று வீடு திரும்ப, பெரும்‌ அவதிக்கு உள்ளானார்கள்‌ என்று அனைத்து ஊடகங்களும்‌, நாளிதழ்களும்‌ படத்துடன்‌ தலைப்புச்‌ செய்தியாக வெளியிட்டுள்ளன.

இந்த அரசின்‌ முதல்வர், பாதிக்கப்பட்ட இடங்களை, அதிகாரிகள்‌ அடங்கிய குழுவுடன்‌ பார்வையிடுகிறார்‌; ஊடகங்களுக்கு போஸ்‌ கொடுக்கிறார்‌; முந்தைய முதல்வர் ஜெயலலிதா அரசின்‌ மீது பழி போடுகிறார்‌; அதோடு அவரது பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அடுத்த நாள்‌ அவர்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த இடங்களை, நேரில்‌ சென்று பார்த்தால்‌ எந்தவித முன்னேற்றமும்‌ இல்லை என்று அப்பகுதி மக்கள்‌ கூறுகின்றனர்‌.

பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ உள்ள மக்கள்‌, பாதிக்கப்பட்ட இடங்களுக்குத் துறை அமைச்சர்கள்‌ யாருமே நேரில்‌ வந்து பார்வையிடவில்லை என்றும்‌, முதல்வர்‌ பார்வையிட்டுச்‌ சென்றவுடன்‌ நிவாரண உதவிகள்‌ வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு விடுகிறது என்றும்‌, முக்கியமாக சென்னையில்‌ ஆளும்‌ கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்‌ வருவதேயில்லை என்று அனைத்து ஊடகங்களிலும்‌, சமூக வலைதளங்களிலும்‌ பேட்டி அளித்துள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்‌.

தற்போதைய இந்த அரசு, நீட்டுக்காக ஒரு கமிட்டி; வெள்ள சேதங்களால்‌ பாதிப்படையாமல்‌ இருக்க ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஒரு குழு; நிதி மேலாண்மைக்கு ஒரு குழு என்று, குழுக்கள்‌ அமைப்பதைப்‌ பார்க்கும்போது, இந்த அரசு, தனது முன்னாள்‌ தலைவர்‌ எப்படி விசாரணை ஆணையங்களை அமைத்து பிரச்சினைகளை திசை திருப்பினாரோ, அதுபோல்‌ இந்த அரசும்‌ குழுக்களை அமைத்து பிரச்சினைகளை திசை திருப்புகிறதோ என்று எண்ணத்‌ தோன்றுகிறது.

இனியாவது, தங்களது இயலாமையால்‌ மக்களுக்கு ஏற்படும்‌ இன்னல்களுக்கு எதிர்க்கட்சிகளைக்‌ குறை கூறாமல்‌, மக்கள்‌ நலப்‌ பணிகளில்‌ உண்மையான அக்கறையுடன்‌ ஈடுபட வேண்டும்‌ என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்‌” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Aiadmk Eps Cm Mk Stalin Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment