Advertisment

'பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை; அதுதான் எங்கள் நிலைப்பாடு': இ.பி.எஸ் திட்டவட்டம்

பாஜகவுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்காது எனவும், அதுவே கட்சியின் நிலைப்பாடு எனவும் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EPS pressmeet at cbe

பாஜகவுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்காது என அக்கட்சி பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதன்படி, "தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. ஆட்சியில் இருந்து தி.மு.க-வை அகற்ற வேண்டும் மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. ஊடகங்கள் நடுநிலையோடு செய்திகளை வெளியிட வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் என்னைக் குறித்து பல விமர்சனங்களை கடந்த சில நாள்களாக முன்வைத்து வருகிறார். அதனை ஊடகங்கள் வாயிலாக நான் தெரிந்து கொள்கிறேன். ஆனால், முதல்வர் தனது கட்சி நிர்வாகிகளுக்கு எழுதிய மடலில், நான் அவரைக் குறித்து கொச்சைப்படுத்தி பேசியதாக தெரிவித்துள்ளார். 

நான் முதல்வராக இருந்த போது, ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நிலையில் என்னை பற்றி தனிப்பட்ட வகையில் பல விமர்சனங்கள் செய்துள்ளார். தற்போது நடைபெற்ற கூட்டத்திலும் கரப்பான்பூச்சி என கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது பதவியையும், நிலையையும் மறந்து இது போன்ற விமர்சனங்களை செய்து வருகிறார்.

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என ஸ்டாலின் விமர்சிக்கிறார். ஆனால், அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும், அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கும் தான் தற்போது தி.மு.க ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டி நிறைவேற்றப்பட்டு வருகிறது.

எடுத்துக்காட்டாக கோவையில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. குறிப்பாக, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம், உக்கடம் மேம்பாலம், ஐ டி பூங்கா ஆகியவற்றுக்கு அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தான் அடிக்கல் நாட்டப்பட்டது. 

மேலும், அத்திக்கடவு அவினாசி இரண்டாம் கட்ட திட்டம், விமான நிலைய விரிவாக்க திட்டம், மேற்கு புறவழி சாலை திட்டம் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. சில திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அ.தி.மு.க ஆட்சியிலேயே 95 சதவீத பணிகள் முடிவு பெற்றது. நில எடுப்பு நடவடிக்கையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அந்தப்பணிகளை தி.மு.க அரசு மேற்கொண்டு வருகிறது.

தி.மு.க அரசு கோவை மாவட்டத்திற்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அறிவிப்பு மட்டுமே செய்துள்ளது. எந்தத் திட்டத்தையும் அறிவிக்காமல், பணியும் நடக்காமல் மாவட்டங்கள் தோறும் சென்று முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். 

அரசு ஊழியர் சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக 2021 தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு, தற்போது தி.மு.க அரசு அதை அமல்படுத்தாமல் உள்ளது. அதனால் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி முதல்வர் ஸ்டாலினை மீண்டும் எதிர்க்கட்சி பதவியில் அமர வைப்போம் என கூறி உள்ளனர். இதைத்தான் நானும் செய்தியாளர்களிடம் தெரிவித்தேன். 

மேலும், கோவை மாவட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தின் 3,300 ஏக்கர் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்று அந்த நீதிமன்ற ஆணையின் அடிப்படையிலேயே தற்போது 410 ஏக்கருக்கான ஆணைகள் மட்டுமே முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

அ.தி.மு.க ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து உதயநிதியுடன் விவாதிப்பதற்கு எங்கள் கட்சியிலும் முன்னாள் அமைச்சர்கள் பலர் இருக்கின்றனர். முதல்வரிடம் கேள்வி கேட்டால் உதயநிதி ஏன் பதில் சொல்ல வேண்டும். அப்படி என்றால் திறமை இல்லாத, பொம்மை முதல்வராக இருக்கிறார் என விமர்சிப்பதில் தவறில்லையே. பிற மாநிலங்களில் ஒரே ஒரு முதல்வர் இருக்கும் போது தமிழகத்தில் மட்டுமே நான்கு முதல்வர்கள் உள்ளனர். அதிகாரமிக்கவர்களாக உள்ள அவர்கள் யார் என்று ஊடகங்களுக்கே தெரியும்.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது. காவல்துறையினர் முழு சுதந்திரத்தோடு செயல்பட முடிவதில்லை. இதனால் போதை பொருள் பயன்பாடு, விற்பனை, தயாரிப்பு என அனைத்தும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Admk Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment