EPS slams DMK government on Kallakurichi issue: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தையடுத்து ஏற்பட்ட வன்முறை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தி.மு.க அரசை தாக்கியுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: சின்ன சேலத்தில் 144 தடை உத்தரவு: சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தலைவர்கள் கோரிக்கை
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இ.பி.எஸ், கள்ளகுறிச்சி சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் மாணவியின் தாயார் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் போதிய விவரங்களை வழங்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி நிர்வாகம் தெரிவித்த தேதிக்கு முன்பாகவே மாணவி இறந்துவிட்டதாக தாயார் குற்றம்சாட்டியுள்ளார். மாணவியின் தாயாருக்கு பள்ளி நிர்வாகமோ, அரசோ ஆறுதல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தாயார் சந்தேக மரணம் என்று கூறிய நிலையில், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இன்றைய வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது. மாணவியின் உறவினர்களும் பொதுமக்களும் உரிய நீதி கிடைக்காததால் தான் போராட்டத்தை கையில் எடுத்தனர். இன்று நடந்த நிகழ்வுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பு. 3 நாட்களாக மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராடி வரும் நிலையில், அரசு செவிசாய்க்கவில்லை. அதனால் தான் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. மாணவிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இன்றைக்கு செயலற்ற அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றது. உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. கடலூரில் பள்ளி மாணவி, முன்னாள் மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு, போன்றவை தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
விசாரணை நடந்துக் கொண்டிருக்கும்போதே, கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகத்திற்கு மாணவி மரணத்தில் தொடர்பில்லை என டி.ஜி.பி கூறுவது முரண்பாடாக இருக்கிறது. மாணவியின் தாயார் தான் மிரட்டப்படுவதாக கூறுவது இந்த விவகாரத்தில் சந்தேகத்தை எழுப்புகிறது.
தி.மு.க எப்போதும் சொன்னதை செய்தது கிடையாது. மக்களை ஏமாற்றவே தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க அளிக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று சொன்னார்கள். ஆனாது எதுவும் நடக்கவில்லை, பல உயிர்கள் தான் போய்க்கொண்டிருக்கிறது. இவ்வாறு இ.பி.எஸ் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil