"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு 2026 ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அறிவிப்பு தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வெளியாகும்.
இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், இன்று காலை 9 மணி அளவில் வனபத்திரகாளி அம்மன் கோயிலில் அ.தி.மு.க வினர் தேர்தல் பணிகளை துவக்கி உள்ளனர். ஏற்கனவே தி.மு.க சார்பில் கூட்டணி பலமாக உள்ள நிலையில், தங்களுடைய ஓட்டு சாவடிகளின் பலத்தை நிரூபிக்க உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளது.
’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை பணியையும் தி.மு.க துவங்கி உள்ளது.
ஒவ்வொரு வீடு, வீடாக சென்று தி.மு.க வினர் மக்களை சந்தித்து தி.மு.க ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகளை கூறி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயம் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி அமைத்து உள்ள நிலையில் அதனை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் அ.தி.மு.க மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மேற்கு மண்டலத்தில் இன்று தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை துவங்கினார்.
"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை இன்று துவங்கி உள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில் தனது பிரச்சாரத்தை துவங்கும் அவர், தனது முதல் கட்ட சுற்றுப் பயணத்தை வரும் 21 ஆம் தேதி நிறைவு செய்கிறார்.
இதனையொட்டி இன்று காலை 9 மணி அளவில் வனபத்ரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், தேக்கம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் ரோட் ஷோவில் கலந்து கொண்டு பொதுமக்களை சந்திக்கிறார்.