2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 9:30 மணிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக, சபாநாயகர் அப்பாவுவை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நேற்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு தலைமை செயலக வளாகத்தில்அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில், இன்று சபாநாயகர் அப்பாவுடன் செங்கோட்டையன் தனியாக சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், வேளாண் பட்ஜெட் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரம் வாசித்தது மட்டுமே திமுகவின் சாதனை. விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக இது உள்ளது என்று விமர்சித்தார். தொடர்ந்து அவரிடம், செங்கோட்டையன் ஏன் உங்களைத் தவிர்க்கிறார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஏன் தவிர்க்கிறார் என்று அவரைப் போய் கேளுங்கள், தனிப்பட்ட முறையில் இருக்கும் பிரச்னை குறித்த கேள்வியை இங்கு கேட்க வேண்டாம். அவரிடம் கேட்டால்தானே காரணம் தெரியும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கடந்த மாதம் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதன்பின் அதிமுக பொதுச் செயலாளர் என்று மட்டுமே கூறி வரும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி என்று பெயர் சொல்வதை தவிர்த்து வருகிறார். இதனால் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையில் கருத்து வேறுபாடு அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.