scorecardresearch

ஓ.பி.எஸ் ஆல் 10 பேரை கூட கூட்ட முடியாது.. முன்னாள் மேயர் வேலுச்சாமி

ஓ. பன்னீர் செல்வம் நீதிமன்றத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இனியும் இது தொடர்ந்தால் தொண்டர்கள் கொந்தளிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என இ.பி.எஸ் ஆதரவு முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி பேச்சு

Ex mayor velusamy
Ex mayor velusamy

அ,தி.மு.கவின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் எனவும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 28) தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து இருந்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதற்கான சான்றிதழ் அவரிடம் வழங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட அதிமுகவினரும் கொண்டாடி வருகின்றனர். கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலை பகுதியில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அதிமுக அலுவலகம் முன் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் எடப்பாடியார் வாழ்க, வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் என கோஷங்களை எழுப்பி கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி, “நீதி தேவதைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். சிறுசிறு துருப்புகளை வைத்துக்கொண்டும் சட்டத்தின் ஓட்டைகளை வைத்துக்கொண்டும் இந்த இயக்கத்தை கெடுப்பதற்கு பார்த்துக் கொண்டிருந்த துரோகிகளுக்கு, பாடம் புகட்டுகின்ற வகையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தால் செய்து கொண்டே இருக்கலாம். ஒரு கூட்டம் நடத்துவதற்கு கூட யோகிதை கிடையாது. 10 பேரை கூட கூட்ட முடியாது என ஒருமையில் விமர்சனம் செய்தார். தொடர்ந்து நீதிமன்றத்தை வைத்து ஓபிஎஸ் குழப்பம் ஏற்படுத்தி வருகிறார். இது தொடர்ந்து கொண்டே சென்றால் தொண்டர்கள் கொந்தளிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்” என்று கூறினார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Eps supporter ex mayor accuses ops and welcomes hc judgement