அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று, அவர்களின் ஆதரவுக் கடிதங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிரோயின் இரட்டைத் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு,க பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என்றும் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.
தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு வழக்கில், இரு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு, தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாகவும், முழு ஆதரவு அளிப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரமாணப் பத்திரத்தில் இ.பி.எஸ் தரப்பினர் கையெழுத்து வாங்கும் பணிகளை மேற்கொண்டனர்.
மேலும், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்ததாக, இ.பி.எஸ் தரப்பு 2,500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது. இதன் மூலம், அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் நகர்வை இ.பி.எஸ் தரப்பு மேற்கொண்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"