அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவரும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, கட்சியின் தலைமைக்கு பல்வேறு பிரச்னைகள் வருகிறது.

இடையில் அதிமுகவில் இரட்டை தலைமை உருவாக்கப்பட்டு, ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.
மேலும் கடந்த ஆண்டில் இருந்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே, பெருமளவு போராட்டம் நடைபெற்று நீதிமன்றம் வரை சென்றது.
ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். விரைவில் அவரை பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதிமுக துணைப் பொதுச்செயலாளராகவும் தேர்தல் ஆணையாளராகவும் உள்ள நத்தம் விசுவநாதன் மற்றும் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும் தேர்தல் ஆணையாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிவிப்பில், “வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 18ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. நாளை (19ம் தேதி) பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம்.
மார்ச் 20ஆம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. மார்ச் 21ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை மனுவைத் திரும்பப் பெறலாம்.
மார்ச் 26ஆம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. மார்ச் 27இல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
‛கழகப் பொதுச்செயலாளர்” பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட கால அட்டவணைப்படி தலைமை கழகத்தில் கட்டணத்தொகை ரூ.25,000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று கழக சட்டவிதி 20 அ பிரிவு – 1, (a) (b) (c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே, இன்று பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில், முதல் நாளான இன்று எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த தேர்தல் அறிவிப்பே செல்லாது என ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தை அணுகி இந்த விவகாரத்தில் சட்ட போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த திட்டம் நடைபெறாத பட்சத்தில், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றிபெறுவார் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil