scorecardresearch

முதல் டூரை திருச்சியில் தொடங்கும் இ.பி.எஸ்: கெத்து காட்ட அ.தி.மு.க-வினர் திட்டம்

எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 28ஆம் தேதி திருச்சி செல்கிறார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் தடால்புடால் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

முதல் டூரை திருச்சியில் தொடங்கும் இ.பி.எஸ்: கெத்து காட்ட அ.தி.மு.க-வினர் திட்டம்
Tamil news updates

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வரும் 28ஆம் தேதி திருச்சி வருகிறார். இதையொட்டி, திருச்சி அதிமுக மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம். திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள எல்.கே.எஸ்.மஹாலில் நடைபெற்றது.

முன்னாள் எம்.பி. குமார்

இந்தக் கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் ப.குமார், ரத்தினவேல், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பரஞ்ஜோதி, வளர்மதி, மாணவர் அணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், என்றும் கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது என்று இந்த செயல்வீரர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

2. திருச்சி மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், என்றும் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் அமைந்திட அனைவரும் பாடுபடுவோம் என்று கூட்டத்தில் சபதமேற்போம்.

3. திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட போது, துரித பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டதுடன், சுமார் ரூபாய் 400 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து புதிய அணையினை கட்டிகொடுத்த அன்றைய தமிழக முதல்வர், வாழும் கரிகால் சோழன் எடப்பாடி பழனிச்சாமிக்கு இக்கூட்டம் நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறது.

4. தனது சுயநலத்திற்காக எதிரிகளுடனும், துரோகிகளுடனும் கைகோர்த்து, கூட்டு வைத்துக் கொண்டு, கழகத்தை அழிக்க துடிக்கும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தினை இந்த செயல்வீரர்கள் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

5. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வையும் கண்டுகொள்ளாமல் மெத்தன போக்குடன் மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

இந்தக் கூட்டத்தில் மாநகர முன்னாள் மேயர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, ஜாக்குலின், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மீனவரணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், அமைப்புசாரா அணி நடராஜன், பிடி பிரிவு சகாபுதின், எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் இன்ஜினியர் ராஜா,பகுதி கழகச் செயலாளர்கள் அன்பழகன் வெள்ளமண்டி சண்முகம் மற்றும் நகர, பேரூர், ஒன்றிய செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்சி அதிமுக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே முதன் முறையாக வரும் 28ஆம் தேதி திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மை பலத்துடன் வரவேற்க முன்னாள் எம்.பி.யும்., திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் ஏற்பாடுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Eps to start first tour in trichy on august 28