அ.தி.மு.க பொதுக்குழு தீர்ப்புக்கு பிறகு செப்டம்பர் 8 வியாழக்கிழமை எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க தலைமை அலுவலகம் செல்கிறார். இதனால் தொண்டர்கள் திரளாக கலந்துக் கொள்ளுமாறு அ.தி.மு.க தலைமைக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கையால் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் முடிந்தது. அந்தக் கூட்டத்தில் ஜுலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடி ஒற்றைத் தலைமை கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: ராகுல் யாத்திரை; பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளுங்கள்; அண்ணாமலை கிண்டல்
இந்த ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவை எதிர்த்து, ஓ.பி.எஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நீதிமன்றம் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கியது. இதனையடுத்து இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்ட நிலையில், ஜூன் 23க்கு உள்ள நிலையே தொடர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதனால் ஜூலை 11 ஆம் நடந்த பொதுக்குழு செல்லாத நிலை ஏற்பட்டது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளாராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாத நிலையும் ஏற்பட்டது.
இதனை எதிர்த்து இ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது. இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்கிறார் இ.பி.எஸ்.
இந்தநிலையில், எடப்பாடி பழனிச்சாமி நாளை வியாழக்கிழமை அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார் என தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான இ.பி.எஸ் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் தலைமைக் கழகம் செல்கிறார். அங்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாகக் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil