பெற்றோரின் சொத்துக்களில் பெண் குழந்தைகளுக்கும், சமபங்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, இந்து கூட்டுக் குடும்பத்தில் பெண்களுக்கு சொத்துரிமையை மறுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட '1956 வருட இந்து வாரிசுச் சட்டம் ' பெண்களுக்கு சொத்தில் (அதாவது, தனிச் சொத்து - தந்தை வாங்கிய சொத்துக்கள்) பங்கு உண்டு என்று சொன்னது. இருப்பினும், அவர்கள் அந்த குடும்பத்தின் பூர்விக சொத்தில் உரிமை கோர முடியாது என்று சட்டம் தெரிவித்தது.
இந்த தவறை திருத்தும் விதமாக, 1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், 'குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு' என்று சட்டம் கொண்டுவந்தது.
2005-ல், மத்திய அரசு, தமிழகத்தைப் பின்பற்றி இந்து வாரிசுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இதன் மூலம், தனது தந்தை வசித்து வந்த (பூர்வீக சொத்து) சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதன் விளைவாக, பூர்வீக சொத்துக்களில் மகள், பேத்திகளும் உரிமை கோர ஆரம்பித்தனர்.
இருப்பினும், இந்தச் சட்டம் 2005-ல் கொண்டுவரப்பட்டதால் அதற்கு முன்பு தந்தையை இழந்த பெண்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இன்று, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு இருக்கும் சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்திற்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என தெளிவுபடுத்தியது.
அரசியல் தலைவர்கள் கருத்து:
திமுக தலைவர மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில், " பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் - திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது!
உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு! " என்று கருத்து தெரிவித்தார்.
திமுக எம்.பி கனிமொழி, வெளியிட்ட செய்திக் குறிப்பில், " ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கே முன்னோடியாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் கலைஞர் பிறப்பித்த பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்ற சட்டத்தை இன்று உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இதுதான் திராவிடம் ! திராவிடத்தால் வீழவில்லை. திராவிடத்தால் வாழ்ந்தோம் " என்று கருத்து தெரிவித்தார்.
மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட செய்திக் குறிப்பில், " இந்து வாரிசு உரிமைச் சட்டம் 2005, பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு இருக்கும் சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்திற்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி உள்ளது.
1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டில், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான சொத்து உரிமை, வாரிசு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார்.
அதன்பின்னர், 1989 இல் கருணாநிதி முதல்வர் பொறுப்பில் இருந்தபோது, பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி, நாட்டுக்கே வழிகாட்டினார்.
இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.
கருணாநிதி, பெண்கள் சம உரிமை பெற 1989 ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டம், கலங்கரை விளக்கமாகத் திகழ்வதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது" என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், உச்ச நீதிமன்றம் "பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு" என்று வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன். இத்தீர்ப்பால், சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத்திற்கு இது மேலும் வலுசேர்ப்பதாக அமையும்" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.