கொங்கு ஈஸ்வரன் மாநாட்டுக்கு தடை கேட்ட தனியரசு கட்சி பிரமுகருக்கு அபராதம்: ஐகோர்ட் அதிரடி

ஈஸ்வரனின் எதிரணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனியரசு நடத்திவரும் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர் என்பதை மனுதாரர் மறைத்து மனுத்தாக்கல் செய்திருப்பதாக புகார்.

By: January 31, 2019, 4:55:21 PM

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நடத்தும் மாநாட்டுக்கு தடை கேட்ட தனியரசு கட்சிப் பிரமுகருக்கு அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவராக ஈஸ்வரன் இருந்து வருகிறார். வருகிற தேர்தலில் தனது கட்சி திமுக அணியில் இடம் பெறும் என கூறி வருகிறார் இவர். அதிமுக அணியில் இடம் பெற்றிருக்கும் கட்சி, கொங்கு நாடு இளைஞர் பேரவை. இந்தக் கட்சியின் தலைவரான தனியரசு, தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்தச் சூழலில் இவர்களின் விவகாரம் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்பலமாகியிருக்கிறது.

அது பற்றிய விவரம் வருமாறு: நாமக்கல்லில் வரும் 3 ஆம் தேதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அதன் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் 2-வது கொங்கு உலக தமிழ் மாநாடு நடத்தப்படவுள்ளது. சேலம் – கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் மாநாடு நடத்துவதால் போக்குவரத்து பாதிப்பு, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் எனக் கூறி மாநாட்டுக்கு தடை கோரி நாமக்கல் குமாரபாளையத்தை சேர்ந்த சரவணன் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம். சத்யநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனியார் நிலத்தில் தான் இந்த நிகழ்ச்சி நடக்க இருக்க இருப்பதாகவும், மாநாட்டுக்கு அனைத்து துறைகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலும் மாநாடு நடத்தப்படும் என உறுதியளித்தார்.

மேலும், மாநாட்டை நடத்தக்கூடிய ஈஸ்வரனின் எதிரணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனியரசு நடத்திவரும் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர் என்பதை மனுதாரர் மறைத்து மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும், இதில் பொது நலன் இல்லை எனவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், மாநாட்டுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ததுடன், தனியரசு கட்சியை சார்ந்தவர் என்பதை மறைத்து மனுத்தாக்கல் செய்ததற்காக மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், அதை பிப்ரவரி 18 க்குள் உயர்நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்துக்கு செலுத்தவும் உத்தரவிட்டனர்.

மேலும் மாநாடு குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நல்லிபாளையம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Er eswaran kmdk conference madras high court order

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X