/indian-express-tamil/media/media_files/2025/06/11/8iqYfxRtsrQMY2rqaG22.jpeg)
MK Stalin in Erode
தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 2 நாட்கள் நடக்கிறது.
இதன் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்து பார்வையிட்டார். மேலும், ரூ.25.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் பேசிய ஸ்டாலின், ’வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியை வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், ஈரோட்டில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த பிரமாண்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டபோது, என் மனதில் அளவில்லா மகிழ்ச்சி உண்டானது.
அதற்காக, வேளாண் பெருமக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என்னுடைய வணக்கத்தையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
விவசாயிகளால்தான் இந்த மண்ணும், மக்களும் மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு உணவுப் பொருள்கள் கிடைத்து உடல் வலிமையோடு வாழ்கிறார்கள்.
உழவு என்பது தொழில் மட்டுமல்ல; அது நம்முடைய பண்பாடு! நிலத்தை ஐந்திணையாக பிரித்து வாழ்வியல் வகுத்த இனம் நம்முடைய தமிழினம். அந்த நிலத்தை எல்லா வகையிலும் நாம் வளப்படுத்தி உயர்த்த வேண்டும்.
வளமான நிலங்களிலும், பயிர்களுக்கு நடுவில் களைகள் முளைக்கும் என்பது விவசாயிகளான உங்களுக்கு நன்றாகத் தெரியும்! அப்படிப்பட்ட களையாக தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சி இருந்தது! எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அது! ஒவ்வொரு விஷயத்திற்கும் நீங்கள் எப்படியெல்லாம் போராடினீர்கள் என்று சிறிது நினைத்துப் பாருங்கள்… இன்றைக்கு அந்த நிலைமை மாறியிருக்கிறது!
கடந்த ஆட்சியில், விவசாயிகளின் தற்கொலை அதிகமானது! உழவர்களின் உரிமையைப் பறிக்க முயன்ற மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் வெயிலிலும், மழையிலும் விவசாயிகள் போராடி அடக்குமுறையை எதிர்கொண்டபோது, கூச்சமே இல்லாமல் அந்த சட்டங்களை ஆதரித்துப் பேசி, பச்சை துரோகம் செய்தவர்கள் அவர்கள். அதனால் தான் நீங்கள் தோற்கடித்தீர்கள்!
வேளாண் பெருங்குடி மக்களான உங்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், அதுபோன்ற களைகள், நாட்டிலிருந்து மொத்தமாக களையப்பட வேண்டும்.
உழவர் பெருங்குடி மக்களான உங்களுக்கு இன்னும் பல திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் வர இருக்கிறது. மீண்டும் நம்முடைய திராவிட மாடல் 2.O ஆட்சிதான் அமையும்! அதற்கு, உழவர்களைக் காக்கும் இந்த அரசுக்கு உழவர் பெருமக்கள் அனைவரும் உற்ற துணையாக இருக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு கொள்கிறேன், இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.