ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டதற்கு, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என அழுத நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை புகழ்ந்து ஆதரவு தெரிவிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் கொள்ளுப் பேரணும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் காலமானார். இதனால், காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிக்கப்பட உள்ளது.
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது என்றதால், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவார் என்ற கேள்வியும் எதிர்ப்பார்ப்பும் எழுந்தது. ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் தேசியத் தலைமை அறிவிக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்பிய ஈரோடு காங்கிரஸ் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் ஏமாற்றம் அடைந்தார். மக்கள் ராஜன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களிடம் பேட்டி அளிக்கும்போது, கண்ணீருடன் பேசினார். தனக்கு சிறிய வயதிலேயே அப்பா, அம்மா இல்லை. இறந்துவிட்டார்கள். ஆனாலும், உழைத்து முன்னுக்கு வந்து காங்கிரஸில் இணைத்துக்கொண்டு மக்கள் பணியாற்றி வருகிறேன். நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்விடம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன் என்று கண்ணீருடன் கூறினார்.
இதைத் தொடர்ந்து, ஈரோடு காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் இன்று ஊடகங்களிடம் பேசுகையில், “ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மூத்த காங்கிரஸ்காரர். இளைஞருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவர் மறுக்கவில்லை. வயது முதிர்ந்தாலும் அவர் எண்ணத்திலும் செயல்பாட்டிலும் என்றுமே அவர் இளைஞர்தான். அவரு எத்தனையோ பேருக்கு ரோல் மாடலாக இருந்திருக்கிறார். நானும் கூட இந்த தலைவர்போல வரமாட்டோமா என்று நினைத்த காலங்களும் உண்டு. இன்றைக்கும் அவர் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய தலைவர். இந்த தேர்தலில் அவர் பம்பரமாக சுழன்று அதிக பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெறுவார்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.