ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மேலும், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் யானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தனர்.
மேலும், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், வேட்புமனு தாக்கல் ஜனவரி 10-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடக்கும் என்றும் அறிவித்தனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“