ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் 5 ஆண்டுகளுக்குள் 2 இடைத் தேர்தல்களை சந்திக்கிறார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4, 2023-ல் காலமானார். இதையடுத்து, நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திருமகனின் தந்தையும், கான்கிரஸ் கட்சியின் தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் உடல் நலக் குறைவால் டிசம்பர் 24, 2024-ல் காலமானார்.
இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தி.மு.க போட்டியிடுவதாக அறிவித்தது. இடைத் தேர்தல் என்றாலே, ஆளும் கட்சி - எதிர்க்கட்சிகள் இடையே பிரச்சாரத்தில், கடும்போட்டியையெ சந்தித்து வந்ததே வரலாறு என்ற நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. அ.தி.மு.க-வின் கூட்டணி கட்சியான தே.மு.தி.க-வும் அதே போல, பா.ஜ.க-வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. புதியதாக கட்சித் தொடங்கிய விஜய், எங்கள் இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல்தான் என்று இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.
இதனால், தி.மு.க எதிர்ப்பே இல்லாமல், ஆளும் கட்சியாக, பெரிய கட்சியாக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை சந்திக்கிறது. ஆனால், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் 30 லட்சம் வாக்குகள் பெற்று, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும் மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது. இதனால், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தி.மு.க - நாம் தமிழர் கட்சி என நேரடி போட்டியாக மாறியது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் சேர்த்து மொத்தமாக 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் நேரத்தில், பெரியார் பேசியதாக சீமான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, பெரியாரிய உணர்வாளர்கள் மற்றும் பெரியாரிய இயக்கத்தினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் மோதல் உருவானது. சீமான் தொடர்ந்து பெரியாரை விமர்சித்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இறுதிக் கட்டப் பிரசாரம் திங்கள்கிழமை (பிப். 3) மாலையுடன் நிறைவடைந்தது. இறுதிக் கட்டப் பிரசாரத்தில் தி.மு.க - நா.த.க களத்தை சூடாக்கியுள்ளது.
பெரியார் குறித்து சிமான் கடுமையாக விமர்சித்து வந்தாலும் தி.மு.க தரப்பில் இருந்து இன்னும் கடுமையான எதிர்வினைகள் வரவில்லை.
சீமான் 10 நாட்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்தார். ஆனால், தி.மு.க தரப்பில், அமைச்சர் முத்துசாமியைத் தவிர வேறு எந்த அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரசாரம் செய்ய செல்லவில்லை. பிசாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.