scorecardresearch

ஈரோடு கிழக்கு தொகுதியில் 38 ஆயிரம் கள்ள ஓட்டு போட வாய்ப்பு; சி.வி. சண்முகம் வழக்கு இன்று விசாரணை

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் முறைகேடாக தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிமுக எம்.பி சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

CV Shanmugam
Erode East by election

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கில் வாக்குகள் தொடர்பாக பல்வேறு புள்ளி விவரங்கள் தொடர்ந்து வரத் தொடங்கியுள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதியில், கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் முறைகேடாக தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிமுக எம்.பி சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அவர் தொடர்ந்த வழக்கு இன்று (பிப்ரவரி 16) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இதுகுறித்து அவர் அளித்த மனுவில், ”தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்த போது, அதில் இடம் பெற்றிருந்த பலர் தொகுதியில் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. பல வாக்காளர்களின் பெயர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளது.

2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் 8 ஆயிரத்து 500 வாக்குகள் என்பதால், தற்போது இறந்தவர்கள், தொகுதியில் இல்லாதவர்கள் என 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்களில் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளது.

எனவே, தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். பூத் ஸ்லீப் அடிப்படையில் அல்லாமல், வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் வாக்காளர்களை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Erode east by election cv shanmugam admk