ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முதல் நாளில், முதல் ஆளாக நூர்முகமது என்ற வேட்பாளர் செருப்பு மாலை அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா காலமானதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுக்கு பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறுகிறது. ஜனவரி 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 7-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். பிப்ரவரி 8-ம் தேதி முதல் வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். பிப்ரவரி 10-ம் தேதி வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான கடைசிநாள். அதே நாளில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் முதல் வேட்பாளராக சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் முதல் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதே நேரத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நூர்முகமது என்ற வேப்டாளர் மாலையுடன் வந்திருந்தது கவனத்தைப் பெற்றுள்ளது. கோவையில் இருந்து வந்திருந்த நூர்முகமது செருப்பு மாலையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளது. மக்கள் தன்னை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு செருப்பாக இருந்து உழைப்பேன் என்பதை சுட்டிக்காட்டி இவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே வேட்பாளர் செருப்பு மாலை அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"