ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தந்தை பெரியாரின் கொள்ளுப் பேரனும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பால் காலமானார். இதனால், காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27-இல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஜனவரி 31ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மாா்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈ.வெ.ரா போட்டியிட்டு 67,300 வாக்குகள் பெற்று 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மரணம் அடைந்ததால், காலியான ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சாா்பில் போட்டியிடவுள்ள வேட்பாளா் யாா் என்பது குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்து அறிவிக்கும் என்று தி.மு.க தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அதே போல, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளரின் பெயரை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அ.தி.மு.க நிர்வாகிகள் குழு வியாழக்க்ழமை சந்தித்துப் பேசினார்கள். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ஜி.கே. வாசன் கூறினார்.
அதே போல, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொண்டதாகவும் கூட்டணிக் கட்சிகளின் நலனை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் யார் போட்டியிட உள்ளனர் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம், 2011, 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கல்ல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.