ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் ஈரோடு கிழக்கில் பணப்புழக்கத்தைக் கண்காணிக்க வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. பணப்பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண், இலவச தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.பி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் தென்னரசு, தே.மு.தி.க சார்பில் எஸ். ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை வேகப்படுத்தி தொகுதி முழுவதும் பரப்புரை செய்து வருகின்றனர்.
இடைத்தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அதிக அளவில் இருக்கும் என்ற விமர்சனம் இருந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் ஈரோடு கிழக்கில் பணப்புழக்கத்தைக் கண்காணிக்க வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. பணப்பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண், இலவச தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் காரணமாக, அந்த தொகுதியில் அரசியல் கட்சிகளின் செலவுகளை கண்காணிக்க வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு அறை, தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் கணக்கில் வராத நிதியை கண்டறிந்து பறிமுதல் செய்ய 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடா குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6669 அளிக்கப்பட்டுள்ளது. ஃபேக்ஸ் மூலமாக தகவல் அனுப்ப 044-28271915 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் itcontrol.chn@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9445394453 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவோ வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“