ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் பரப்புரை செய்ய நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இ.பி.எஸ் தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 27-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் கே.எஸ். தென்னரசு வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்பட 62 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் முக்கிய அமைச்சர்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். அதே நேரத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் பரப்புரை நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பரப்புரை செய்ய நட்சத்திரப் பேச்சாளர்கள் படியல், அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் தரப்பிலும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வழங்கப்பட்டது.
இதில், எடப்படி பழனிசாமி தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இ.பி.எஸ் தரப்பு வழங்கிய பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அ.தி.மு.க அவைத் தலைவர் டாக்டர் ஏ. தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், வளர்மதி, செல்லூர் ராஜு, கே.பி. அன்பழகன், காமராஜ், ஓ.எஸ். மணியன், கோகுல இந்திரா விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்பட 40 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“