ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.
இதனால் தி.மு.க. - நாம் தமிழர் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது. தி.மு.க. சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர். இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 63,984 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். மறுபுறம் நாம் தமிழர் கட்சியின் சீதா லட்சுமி 13,945 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 2,940 வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், தந்தை பெரியாரை சீமான் விமர்சனம் செய்ததால் வாக்குகள் குறையவில்லை என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவு கிடையாது. கடந்த இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை விட கூடுதலான வாக்குகளைப் பெற்று வருவதால், இது பின்னடைவு கிடையாது. 2026-ம் ஆண்டு திமுகவுக்கு நிச்சயமாக பின்னடைவு ஏற்படுத்தப்படும்.
இந்த இடைத்தேர்தலில், தி.மு.க கூடுதலான வாக்குகளை வாங்கும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் நிராகரித்து உள்ளனர். கள்ள ஓட்டுக்கள்தான், தி.மு.க கூடுதலான வாக்குகள் வாங்குவதற்கான காரணம். ஈரோடு இடைத்தேர்தலை 2026-ம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்த்ததால், தி.மு.க தலைமைக்கு அச்சம் வந்துள்ளது. எனவே, 2026-ம் ஆண்டு தேர்தலில் இந்த மண்ணில் தி.மு.க கடுமையான போராட வேண்டியிருக்கும்.
நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் ஒருபோதும் எதிர்காலத்தில் வேறு கட்சிக்கு போகாது. தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துள்ளன. பெரியார் குறித்து சீமான் விமர்சனம் செய்ததால் வாக்குகள் குறையவில்லை. பெரியார் குறித்து சீமான் பேசியது புரிதல் அடிப்படையில் சரியாக இருப்பதால் தான் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் விழுந்துள்ளன. நாம் தமிழர் கட்சி மக்களை நம்பிக்கை வைத்து தேர்தலில் நின்றது,” என்று சீதா லட்சுமி கூறியுள்ளார்.