ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லுாரியில் இன்று (மார்ச் 2)காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் முதல் சுற்று முடிவில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
தேர்தலில் அவர் வெற்றி பெறுவது உறுதியானதும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”வெற்றி பெறுவேன் என்பது ஒரு மாதத்திற்கு முன்பே தெரியும். இந்த வெற்றி நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. 20 மாத ஆட்சிக் காலத்தில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு இந்த வெற்றி ஊக்கத்தை தரும்.
ஈரோட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் உறுதுணையுடன் நிறைவேற்றுவேன். ஸ்டாலின் என்னைவிட வயதில் சிறியவர் என்றாலும், அனுபவத்திலும், செயல்திறனிலும் பன்மடங்கு உயர்ந்தவர். அவருடன் பேரவையில் நெருக்கமாக இருக்கக்கூடிய நிலையை நினைத்து நான் பெருமை அடைகிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். திமுக அமைச்சர்கள் அவர்கள் தேர்தலில் நின்றபோது கூட இவ்வளவு உழைத்தார்களா என தெரியவில்லை. கடுமையாக உழைத்தார்கள். காலை, மாலை என வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்தார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி. பெரிய வெற்றிதான் என்றாலும், அதை கொண்டாடும் மனநிலை தான் இல்லை. மகன் விட்டுச் சென்ற பணியை செய்ய வேண்டும் என்ற மன நிலையில் தான் உள்ளேன்.” என உருக்கமாகத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“