Erode East bypoll election; EPS Annamalai meet Tamil News: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி களமாடுகிறது. இதேபோல், அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கிய நிலையில், தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட நேற்று வரை மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் வாக்காளர்களை சந்தித்து தங்களுக்கு வாக்களிக்கும்படி தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு நேரில் சென்ற அண்ணாமலை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இந்த சந்திப்பின் போது அதிமுக தரப்பில் ஜெயக்குமார் உடன் இருந்தார். பாஜக தரப்பில் கரு.நாகராஜன், பாஜக மேலிடப்பொறுப்பாளர் ரவி உடன் இருந்தனர். இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் காரில் வெளியேறிய அண்ணாமலை செய்தியாளர்களிடம் சில வினாடிகள் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், கமலாலயத்தில் (பாஜக தலைமையிடம்) பேசுவோம். ஒரு மணி நேரம் கொடுங்கள் கமலாலயத்தில் நாங்கள் சந்திக்கிறோம்’ என்றார்.

இதனிடையே, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்து ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார். கிரீன்வெஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் அவரை அண்ணாமலை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இபிஎஸ் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் ஒன்றிணைந்து செயல்படவேண்டுமென பாஜக அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வேட்பாளர் தென்னரசு இடைத்தேர்தலில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி – அண்ணாமலை சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் வேட்பு மனு தாக்கல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேட்புமனு தாக்கல் 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil