பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
ஈரோடு இடைத்தேர்தலில் அப்பட்டமாக தேர்தல் விதிமீறல்கள் நடக்கிறது. இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் ஆளும் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகள் குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்தப் பயனும் இல்லை.
ஆளுங்கட்சியான திமுக வாக்காளர்களை அழைத்துக் கொண்டு போயி சாப்பாடு போட்டு அவர்களை அடைத்து வைக்கிறார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பகிரங்கமாக தேர்தல் விதிமீறல்கள் ஈரோட்டில் நடைபெற்று வருகிறது.
பலமுறை தேர்தல் விதிமீறல் குறித்து நான் பேசியுள்ளேன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் போதும் அது குறித்து பேசி இருக்கிறேன். நேரடியாக ஈரோட்டு இடைத்தேர்தல் குளறுபடிகள் குறித்து ஊடகங்கள் நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும். மேலும், ஊடகத்தினருக்கு நேர்மையும் தர்மமும் இருக்கிறது. அதை மீறக் கூடாது. திறந்த வழியில் நடக்கும் விதிமீறல்கள் குறித்து ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது எந்த விதத்திலும் சரியாகாது.
வாக்காளர்கள் ஓட்டு போட்டு தான் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று முடிவு செய்யப்படும் ஸ்டாலின் ஓட்டு போடுவதில்லை. மக்கள் எந்த தீர்ப்பு கொடுப்பார்கள் என்று தேர்தல் முடிவுக்கப் பின் தான் தெரிய வரும்.
ஈரோடு இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுமா இல்லையா என்று நான் எப்படி சொல்ல முடியும். தேர்தல் விதிமுறைகள் மீறி ஜனநாயக படுகொலை ஈரோடு இடைத்தேர்தலில் செய்யப்படுகிறது. எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அத்துமீறிய நடவடிக்கைகள் இந்தத்தேர்தலில் நடைபெறுகிறது. ஆடுகளைப் பட்டியில் அடைப்பது போல வாக்காளர்களை ஆளுங்கட்சி அடைத்து வைக்கிறார்கள். இது முழுக்க முழுக்க விதிமீறல். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி, இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. ஒன்றரை கோடி அண்ணா திமுக தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் பிரம்மாண்டமாக அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக வேட்பாளர் கட்டாயம் வெற்றி பெறுவார்."
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.