ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. கடைசி நாளான கடந்த வெள்ளிக்கிழமை அன்று தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்தார், இந்த வேட்புமனுக்களின் பரிசீலனை கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது. 58 வேட்பாளர்கள், 65 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த சூழலில், 3 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பட்டது.
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் 47 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.
அதன்படி, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.22 சதவீத வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றதால், தற்போது மீண்டும் அக்கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.