ஈரோடு கிழக்கில் பா.ம.க போட்டி இல்லை; யாருக்கும் ஆதரவு கிடையாது: அன்புமணி அறிவிப்பு
எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்போவது இல்லை எனவும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க.வுக்கு இந்த தொகுதியை த.மா.கா. விட்டுக்கொடுத்தது. எனவே, ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2011, 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர். அதுபோல் ஓ.பி. எஸ் அணிதரப்பிலும் போட்டியிடப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. வேட்பாளராக புகழேந்தி அல்லது வேறு யாராவது அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பா.ஜ.க போட்டியிட்டால் ஆதரவளிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளராக யார் களமிறக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், "காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று நினைக்கிறேன். இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி மேலிடத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன். நான் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன்" என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.
Advertisment
Advertisement
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளர். அதேபோல், எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்போவது இல்லை எனவும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த ஓ பன்னீர் செல்வம் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவு கோர உள்ள நிலையில், பாமக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.