ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெற்றது. தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. விஜய்யின் த.வெ.க போட்டியிட வில்லை என அறிவித்தது.
இந்நிலையில், நேற்று வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். இந்த சூழலில் நேற்று சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தி.மு.க, நாம் தமிழர் கட்சி உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க அறிவித்த நிலையில், அ.தி.மு.க பிரமுகராக இருந்த செந்தில் முருகன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து அவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் இன்று செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்.