ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி பிப். 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேகனா உள்பட பலர் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இந்திய அரசை அடுத்து யார் ஆளப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் தேர்தல். அடுத்து வரும் நடாளுமன்றத் தேர்தலை தீர்மானிக்கும் தேர்தல். இத்தேர்தல் நடைபெறுகின்ற நல்லாட்சிக்கு சான்றிதழ் அளிக்கும் தேர்தல் என்றார்.
தொடர்ந்து, அ.தி.மு.க-வை விமர்சனம் செய்தார். "அ.தி.மு.க எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி. அ.தி.மு.கவிற்கும், தி.மு.கவிற்கும் சரியோ, தவறோ ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் மத்திய அரசு முன்பு ஜெயலலிதா எப்போதும் மண்டியிட்டது கிடையாது. இதனால் தான் ஜெயலலிதாவிடம் பிடித்தது என்ன? என கருணாநிதியிடம் கேட்டபோது அவரது துணிச்சல் என பதிலளித்தார்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“