ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் பிப்.5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெற்றது. தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. விஜய்யின் த.வெ.க போட்டியிட வில்லை என அறிவித்தது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி என்ற பெண்ணும் வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு மாநிலத்தை சேர்ந்த அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது பரபரப்பைபும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதனால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பெண்ணின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு 46 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த குழப்பத்தை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டு வந்த மணிஷ் மாற்றப்பட்டு புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஒசூர் மாநகராட்சி ஆணையராக உள்ள ஸ்ரீகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.