ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த நிர்வாகியான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் உடல்நல பாதிப்பால் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 5-ஆம் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக தி.மு.க வேட்பாளர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். அந்த வகையில், தி.மு.க சார்பில் வி.சி. சந்திரகுமார் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என ஸ்டாலின் அறிவித்தார்.
அ.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி போட்டியிடுவார் என சீமான் அறிவித்தார். அதன்படி, இந்த இடைத்தேர்தலில் முதன்முறையாக தி.மு.க மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி உருவானது. சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இதனடிப்படையில், தி.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று (பிப் 3) மாலையுடன் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனால் வேட்பாளர்கள் அனைவரும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.