New Update
00:00
/ 00:00
ஈரோடு அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் வழங்க மறுத்ததால், காலில் அடிப்பட்ட தாயை, மகள் தூக்கிச் சென்ற சம்பவம் குறித்து பலரும் கேள்விகளை எழுப்பிய நிலையில், மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடத்த உள்ளதாக அரசு மருத்துவமனை சுகாதார இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு அருகே பெரியவலசு பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சொர்ணா. இவர் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் காலில் காயமடைந்தார். காயமடைந்த மூதாட்டியயை மீட்ட அவருடைய மகள் வளர்மதி, தனது தாயை ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது, காலில் காயம் ஏற்பட்டதால் நடக்க முடியாமல் இருந்த மூதாட்டி சொர்ணாவை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்து செல்ல, அவருடைய மகள், மருத்துவமனை ஊழியர்களிடம் ஸ்ட்ரெச்சர் கேட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் தரப்பில் ஸ்ட்ரெச்சர் வழங்காமல் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வேறு வழியில்லாமல், வளர்மதி விபத்தில் அடிபட்ட தனது தாயை மருத்துவமனை வளாகத்துக்குள் கைகளால் துக்கிச் சென்றார். இந்த சம்பவத்தை அங்கே இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் வழங்க மறுத்ததால், காலில் அடிப்பட்ட தாயை, மகள் தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு அரசு மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், மே 30-ம் தேதி இது குறித்து உரிய விசாரணை நடத்த உள்ளதாக அரசு மருத்துவமனை சுகாதார இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, ஈரோடு அரசு மருத்துவமனை சூப்பிரண்டு மற்றும் ஆர்.எம்.ஓ ஆகியோர் விளக்கம் அளிக்க மெமோ வழங்கப்பட்டுள்ளது; இருவரும் கொடுத்த விளக்கத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.