ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி பாலக்கரையில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 35 மாணவ – மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இப் பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. அதில் ஒன்றை மாணவ – மாணவிகளும், மற்றொன்றை ஆசிரியைகளும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை
இந்நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு திடீரென கடந்த 21 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெருந்துறை அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவரிடம் மருத்துவர் பேசியபோது, தான் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்ததாகவும், அப்போது கொசு கடித்ததாகவும் கூறியுள்ளார்.
மாணவன் சொன்னதை கேட்டு அவருடைய தாய் பதறிப்போன நிலையில், இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதை விசாரணை செய்த மாவட்ட ஆட்சியர் இதுபற்றி மேலும் விசாரணை நடத்த கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நவம்பர் 30 ஆம் தேதி பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிசந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் சம்பந்தப்பட்ட பாலக்கரை பள்ளிக்கு விசாரணை நடத்த சென்றனர்.
இந்த விசாரணையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை தலைமை ஆசிரியை கீதா ராணி கழிப்பறை சுத்தம் செய்ய வைத்தது தெரிய வந்துள்ளது. மேலும் அதிகாரிகள் விசாரணை நடத்த வரும்போது தலைமை ஆசிரியை கீதா ராணி பணிக்கு வராமல் தலைமறைவாகினார்.

வன்கொடுமை சட்டத்தில் கைது
இதற்கிடையில், கழிப்பறையை சுத்தம் செய்ததால் கொசு கடித்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை கீதா ராணி மீது வன்கொடுமை சட்டம் 301 (ஆர்), 310 (ஜே), 75, இதச 286 போன்ற 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
முன்னதாக, மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை கீதா ராணி பணிஇடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தொடக்க கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கீதா ராணி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை இன்று நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil